100 வயதைக் கடந்துள்ள கேரளாவின் புரட்சித்தலைவி கே.ஆர்.கௌரியம்மாவின் பிறந்தநாள் விழாவை ஆலப்புழாவில் முதல்வர் பினராயி விஜயன் இன்று தொடங்கிவைத்தார்.
கே ஆர் கவுரியம்மா! இவர் தான் நிஜ புரட்சித்தலைவி! எப்படித் தெரியுமா?

கேரளாவின் முதல் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர் கௌரியம்மா. 1957-ல் கேரளாவில் அமைந்த, முதல் கம்யூனிஸ்ட் அரசில் வருவாய், கலால், தேவசம் அமைச்சராகப் பணியாற்றிய இவர், 100 வயதைக் கடந்து ஆலப்புழா மாவட்டத்தில் சதனாடு என்கிற சிற்றூரில் வசித்துவருகிறார். உழுபவருக்கே நிலம் சொந்தம், நில உச்சவரம்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்களைக் கொண்ட நிலச் சீர்திருத்த மசோதா, பெண்கள் ஆணைய மசோதா உட்பட பல முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்தவர் என்கிற பெருமைக்குரியவர் கௌரியம்மா.
இ.எம்.எஸ் தலைமையிலான அரசுகளில் இருமுறை, ஈ.கே.நாயனார் தலைமையிலான அரசுகளில் இருமுறை அமைச்சராகப் பணியாற்றி கேரளாவில் பல சீர்திருத்தங்களுக்கும் வளர்ச்சிக்கும் வித்திட்டவர் கௌரியம்மா. கட்சி வேறுபாடின்றி அனைத்துத் தலைவர்களாலும் பெரிதும் மதிக்கப்படும் கௌரியம்மாவுக்கு, ஆலப்புழாவில் நேற்று பிறந்த நாள் விழா நடைபெற்றது. அதையொட்டி, கேரளச் சட்டமன்றத்துக்கு நேற்றைய தினம் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டது.
“போராட்டங்களின் வீரியத்தில் தாயாக, மலையாளக் கரையில் மாற்றத்தின் வழிதிறக்க கனல்வழிகள் ஏற்ற வீரப்பெண்மணியான கேரளத்தின் கௌரியம்மாவுக்கு, 100 வயது நிறைவுற்றது. காலம் பாதுகாத்த முன்விதிகளைத் தூக்கியெறிந்து, வரலாற்றில் தலையீடு செய்து முன்சென்ற அவர், இன்று உயிர் வாழ்கிறார். முதல் சட்டமன்றத்தில் உறுப்பினரான ஒரே எம்.எல்.ஏ அவர்தான். புரட்சியின் கனலாய் தளிர்த்த பூமரம் என்று போற்றப்பட்ட கௌரியம்மாவுக்கு வந்தனம்” - என்று, கேரள சட்டமன்றத்தில் அவருக்குப் புகழாரம் சூட்டினார் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன்.
கௌரியம்மாவின் பிறந்த நாள் விழாவை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கிவைக்க, எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னிதாலா விழாவுக்குத் தலைமை தாங்கினார். கௌரியம்மாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய ஆவணப்படத்தை வெளியிட்டார், முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன். கௌரியம்மா அறக்கட்டளையைத் தொடங்கி வைத்தார், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி. கௌரியம்மா வாழ்க்கை வரலாறு பற்றிய நூலை வெளியிட்டார், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணா. இதிலிருந்தே கேரள அரசியலில் கௌரியம்மாவின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ள முடியும்.
"நம்முடைய காலத்தில் வாழும் மிக உயர்ந்த தலைவர்களில் ஒருவர் கௌரியம்மா. அவர், கேரளாவுக்கு மிகப்பெரிய பங்களிப்பை ஆற்றியுள்ளார். அவருடைய 100 வது பிறந்த நாளில் அவரை வணங்குகிறோம்" என்று பினராயி விஜயன் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.