தஞ்சை பெரிய கோயிலின் 1000வது ஆண்டு விழாவை அன்றைய அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னின்று நடத்தியபோது நிகழ்ந்தவற்றை மனமுருக விவரித்து இருக்கிறார். அன்றுதான் கருணாநிதி ஒரு ரகசியத்தை வெளிப்படையாக சொன்னாராம்.
செம்பியன்மாதேவிக்கும் கருணாநிதிக்கும் என்ன சொந்தம்? தங்கம் தென்னரசு சொல்லும் ரகசியம்!
அந்த விழாவின்போது ஒரு கண்காட்சி நடத்தும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். அதற்காக சோழ சாம்ராஜ்யத்தில் உள்ள செப்புத் திருமேனிகள், செப்பேடுகள் உள்ளிட்ட பழம்பொருட்களை எல்லாம் தேர்வு செய்தோம். அப்போது செம்பியன் மாதேவி என்ற கிராமத்தில் உள்ள கோயிலில் ஒரு பழமையான மரக்கால் கிடைத்தது.
அதில் 'செம்பியன் மாதேவி' என்ற பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது. கூடவே, பழங்கால சீனப்பானை ஒன்றும் கிடைத்தது. அவற்றை கண்காட்சியில் வைத்திருந்தோம்.
கண்காட்சியைச் சுற்றிப்பார்த்த கலைஞர் அந்த மரக்காலைப் பார்த்து, "இது என்னய்யா?" என்று கேட்டார். "அய்யா அந்த மரக்காலில் செம்பியன் மாதேவி என்ற குறிப்பு இருக்கிறது. செம்பியன் மாதேவி என்ற ஊரில் கள ஆய்வு செய்தபோது அது கிடைத்தது" என்று சொன்னேன்.
உடனே அவர், "எந்த ஊரில் கிடைத்தது?" என்று திரும்பவும் கேட்டார். உடனே, "செம்பியன் மாதேவி என்பவர் ஒரு சோழப் பேரரசி, முதலாம் பரந்தகனின் மருமகள், கண்டாராதித்த சோழனின் மனைவி" என்றெல்லாம் சொல்லிவிட்டு, "திருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் கீழ்வேலூர் என்றொரு ஊர் இருக்கறது.
அந்த ஊரில் இருந்து நேரே தெற்கே போனால் தேசலூர் என்றொரு ஊர் இருக்கிறது. அங்கிருந்து நாலரை கிலோ மீட்டர் சென்றால், செம்பியன் மாதேவி என்றொரு ஊர் வரும். அந்த ஊரில் உள்ள கோயிலில் தான் இது கிடைத்தது" என்பதை சுமார் 10 நிமிடத்துக்கு நான் விலாவரிவாகச் சொன்னேன்.
நான் சொல்லுவதை எல்லாம் என் முகத்தைப் பார்த்தபடி மிகப்பொறுமையாக கேட்டுக்கொண்டிந்த கலைஞர், நான் முடித்த பிறகு மெதுவாகச் சொன்னார், "யோவ், அது எங்கம்மா பிறந்த ஊருய்யா" என்று.
கருணாநிதிக்கு சந்தோஷம் கொடுக்கமுடிந்ததுதான் பெரிய சந்தோஷம் என்கிறார் தங்கம் தென்னரசு.