காமராஜர் காலத்தில் படிப்புக்கு எத்தனை முக்கியத்துவம் கிடைத்தது தெரியுமா?

பள்ளிக் கல்வியை முடிக்காத தலைவர் காமராஜர்தான், தமிழகத்தில் கல்வியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்.


குழந்தைகளின் பசியைப் போக்கி எழுத்தறிவிக்கக் காமராஜ் செயல்படுத்திய மதிய உணவு திட்டம், மக்களிடையே அறிவை மட்டும் வளர்க்கவில்லை, பல்வேறு இனத்தை சேர்ந்த பிள்ளைகளை ஒன்றாக அமர்ந்து உணவு அருந்த செய்தது. அதனால் அக்காலத்தில் நிலவி வந்த ஜாதிப்பாகுபாடுகள் மலிந்தன.

15,303 ஆரம்பப்பள்ளிகள் இயங்கி வந்த தமிழகத்தில், 26,700 ஆரம்பப் பள்ளிகளாக் காமராஜர் ஆட்சியில் உயர்ந்தன.  471 உயர்நிலைப்பள்ளிகளே இருந்த தமிழ்நாட்டில் 1361 உயர்நிலைப் பள்ளிகளை உண்டாக்கினார் காமராஜர். கல்லூரிகளின் எண்ணிக்கையோ 28 ஆக இருந்தது. அவைகள் காமராஜர் ஆட்சிக்காலத்தில் 50க்கு மேலாக உயர்ந்தன. 6 பயிற்சிக் கல்லூரிகள் இருந்த தமழ்நாட்டில் 17 பயிற்சிக் கல்லூரிகளாக ஆக்கினார் காமராஜர். மேலும் 3 உடற்பயிற்சிக் கல்லூரிகளைத் தோற்றுவித்தவரும் காமராஜரே.

பள்ளிக் கூடமில்லாத கிராமங்களே தமிழகத்தில் இருக்கக்கூடாது என்று பெருந்தலைவர் காமராஜர் கருதினார். தமிழ்நாட்டில் முன்னூறும் அதற்கும் மேலும் மக்கள் தொகையுள்ள எல்லாக் கிராமங்களிலும், ஒரு மைல் சுற்றளவிற்குள் பள்ளிக்கூடங்களை ஏற்படுத்தினார் காமராஜர்.

18 லட்சத்து 50 ஆயிரம் சிறுவர் சிறுமிகள் படித்துக் கொண்டிருந்தார்கள். அன்றைய தமிழகத்தில் அந்த நிலைமையை மாற்றி 34 லட்சம் பிள்ளைகள் படிக்கும் வாய்ப்பினைக் காமராஜர் உண்டாக்கினார். பள்ளி வேலை நாட்கள் எல்லாவற்றிலும் நண்பகல் உணவு படிக்கும் குழந்தைகளுக்குக் காமராஜர் வழங்கச் செய்தார்.

கிழிந்து, நைந்து போன ஆடைகளோடு என் குழந்தையை எப்படிப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்புவேன் - என்று ஏங்கி, ஏழைத் தாய்மார்கள் கண்ணீர் வடித்தார்கள். அவர்களது கண்ணீரைத் துடைத்துக் காமராஜர், எல்லாப் பிள்ளைகளுக்கும் இலவசச் சீருடைகள் வழங்கச் செய்தார்.

காமராஜரே முதன்முதலில் தமிழிலே பாடப்புத்தகங்கள் வெளியிட வழி செய்தவர். கோவை அரசினர் கலைக் கல்லூரியிலும் மூன்று ஆண்டு பட்டப்படிப்பில் அரசியல் பாடங்களைத் தமிழில் கற்றுத் தருவதற்கும் காமராஜரே வழிவகைகள் செய்தார்.

ஏழை, எளிய மாணவர்களுக்கு உபகாரச் சம்பளங்கள் வழங்கினார். தொழில்நுட்பம், கல்வித்துறை, மருத்துவத்துறை, வேளாண்மைத்துறை, காலநடைத் துறை, அரிசன நலத்துறை ஆகிய துறைகளில் மாணவர்களுக்கு உபகாரச்சம்பளம் வழங்கி, இத்துறையில் சிறந்த மாணவர்களை உருவாக்கி நாட்டிற்கு அவர்களை வழங்கினார் காமராஜர்.

அறிவு வளர்ச்சியை கவனத்தில் கொண்டு, இந்தியாவிலேயே முதன் முதலாகப் பொது நூலகச் சட்டத்தை ஏற்படுத்தி, 454 கிளை நூங்கங்களைக் காமராஜர் அமைத்தார். எல்லா மாவட்டங்களிலும், மாவட்ட மத்திய நூலகங்கள் இவ்வாறு ஏற்பட்டன.

இப்படியொரு சாதனையை இனியொரு தலைவனால் நிகழ்த்த முடியுமா?