டி.டி.வி கட்சிக்கு எந்தெந்த தொகுதியில் வெற்றி? விறுவிறு கருத்துக்கணிப்பு!

வழக்கமாக அ.தி.மு.க. கூட்டணிக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் மோதல் என்று இருமுனை போட்டிதான் தமிழகத்தில் இருக்கும். இந்த முறை முதன்முறையாக மும்முனைப் போட்டிக்கு வழிவகை செய்திருக்கிறார் தினகரன்..


40 தொகுதிகளையும் 18 இடைத்தேர்தல் தொகுதிகளையும் கைப்பற்றியே தீருவோம் என்று சவால் விட்டுக்கொண்டிருக்கும் தினகரன், உண்மையில் அதற்கான எந்த அதிரடி திட்டமும் வகுக்கவில்லை என்பதுதான் ஆச்சர்யம். அவருடைய பிரசாரம் தவிர இதுவரை எங்கேயும் பணமோ, டோக்கனோ கொடுக்கப்படவில்லை.

ஆனாலும் அவருடைய கட்சி வேட்பாளர்கள் வெற்றியைத் தொடவேண்டும் என்ற முனைப்புடன் கடுமையாக உழைக்கிறார்கள். முதலில் 18 இடைத் தேர்தல் தொகுதிகளில் தினகரனுக்கு அதிகம் சாதகமாக இருக்கும் தொகுதிகள் என்றால் மூன்றே மூன்றுதான்.

முதல் தொகுதி மானாமதுரை. இங்கு நிற்கும் மாரியப்பன் கென்னடி திடீரென வேகமெடுத்து கடுமையாக உழைத்துவருகிறார். இவரது வேகத்தைப் பார்த்து அ.தி.மு.க.வின் நெட்டூர் நாகராஜனும், தி.மு.க. வேட்பாளர் இலக்கியதாசனும் மிரண்டு நிற்கின்றனர்.

அடுத்த தொகுதி ஆண்டிப்பட்டி. இது தங்கதமிழ்செல்வன் தனக்காக சிறப்பாக கள வேலைகள் முடித்து வைத்திருக்கும் தொகுதி. அவர் திடீரென தேனி நாடாளுமன்ற வேட்பாளராக மாறிவிட்டதால், அ..ம.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார் ஈசியாக ஓட்டு வேட்டையாடி வருகிறார். தி.மு.க. வேட்பாளர் மகாராஜனும், அ.தி.மு.க. வேட்பாளரும் தி.மு.க. வேட்பாளரின் அண்ணனுமான லோகிராஜனும் தடுமாறிக்கொண்டு இருக்கின்றனர்.

மூன்றாவது வாய்ப்புள்ள தொகுதி முஸ்லீம் மக்கள் அதிகமுள்ள ஆம்பூர். இங்கு தினகரன் ஆதரவுடன் களம் இறங்கியுள்ள பாலசுப்பிரமணி, இஸ்லாம் ஓட்டுக்களை குறிவைத்து வேட்டையாடுகிறார். இந்த மூன்று தொகுதிகள் தவிர மற்ற இடங்களில் அ.தி.மு.கவி.ன் வாக்குகளைப் பிரிக்க மட்டுமே தினகரன் பயன்படுகிறது.

நாடாளுமன்றத் தொகுதிகளைப் பொறுத்தவரை  11 தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க. ஓரளவு பலத்துடன் களம் இறங்கியுள்ளது. குறிப்பாக திருச்சியில் சாருபாலா தொண்டைமான் மட்டுமே வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. மற்றபடி சேலம், திண்டுக்கல், பெரம்பலூர், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, தேனி, ராமநாதபுரம், தென் சென்னை, தென்காசி ஆகிய 10 தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெறுவார் தினகரன்.