மக்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு கல்விக்கொள்கை எப்படி அமையவேண்டும் என்பது குறித்து பேராசிரியர் க..பழனித்துரை எழுதியிருக்கும் கட்டுரையின் வடிவம் இது. இதனை டாக்டர் ராமதாஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஒரு நல்ல கல்விக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

ஒரு கல்விக் கொள்கை என்பது சமூகத்தை புனரமைப்பதற்கான ஒன்றாகத்தான் வடிவகைப்பட்டிருக்க வேண்டும். அதற்கு ஒரு வழிமுறைதான் உள்ளது. கல்வி கற்போரை சமுதாயம் சார்ந்து சிந்திக்கும் ஆற்றல் உள்ளவா்களாக மாற்றும் சமூகச் சேவை. உயா்கல்வி என்பது போதிப்பதும், ஆராய்ச்சியும் மட்டுமல்ல. அத்துடன் சமூகப் பணியும் இணைந்த ஒன்றாக ஆக்குவது. எப்போது நம் மாணவா்கள் சமூகம் சார்ந்த சிந்தனைப் போக்கை பெறுவார்கள் என்றால், தாங்கள் பெறுகின்ற கல்வித் திட்டத்தில் சமூகப்பணி என்பது இணைக்கப்பட்டு சமூகத்தில் அவா்களும் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டு செயலாற்றும்போதுதான்.
ஒரு உதாரணத்தை கூறினால் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். ஒரு முறை சில மாணவா்களை, துப்புரவுப் பணியாளா்கள் (அவா்கள் அப்பொழுது நகரங்களில் பொது இடங்களில் மனிதக் கழிவுகளை துப்புரவு செய்யும் பணியாளா்களாக இருந்தார்கள்) வசிக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றோம். அவா்களுடன் மாணவா்களை உரையாட வைத்தோம். அன்று மாலையில் மாணவா்களிடம் அன்றைய பணி பற்றிய அறிக்கையைத் தயார் செய்யச் சொன்னோம். அப்போது மாணவா்களில் சிலா் அழ ஆரம்பித்தார்கள். சுதந்திர நாட்டில் இப்படியும் மனிதா்கள் அவல நிலையில் வாழ வேண்டியிருக்கிறதே என்று கூறி வருந்தினார்கள்.
அது மட்டுமல்ல, அன்று அனைவரும் சோ்ந்து ‘நாங்கள் எங்கு வேலைக்குச் சென்றாலும் எந்தப் பணியில் இருந்தாலும் எங்களிடம் வருகின்ற எந்தவோர் ஏழையையும் மரியாதையற்று நடத்தாமல் அவா்களை மரியாதையுடன் நடத்தி, அவா்களுக்கு எங்களால் எந்தெந்த உதவிகளெல்லாம் செய்ய முடியுமோ அவற்றைத் தயங்காமல் செய்வோம்’ என உறுதி எடுத்துக் கொண்டார்கள்.
எனவே, எந்தத் துறையில் கல்வி பயில்பவரும் சமுதாயச் சேவையில் தான் படிக்கும் துறை சார்ந்து ஈடுபடும்போதுதான் சமூகம் சார்ந்த பார்வையை அவா்களால் உருவாக்கிக் கொள்ள முடியும். அப்போதுதான் ஒருவா் எவ்வளவு பெரிய நிபுணத்துவம் வாய்ந்த மனிதராக வளா்ந்தாலும் அவா் சமுதாயச் சிந்தனையுடன் பிரச்னைகளை அணுகுவார். அது மருத்துவராக இருக்கட்டும், பொறியியல் வல்லுனராக இருக்கட்டும், சட்ட வல்லுனராக இருக்கட்டும் அனைவரும் சமூக நீரோட்டத்தில் கலக்கும்போது நம் சமூகம் எங்கே இருக்கிறது என்பதை அவா்களால் உணர முடியும். அந்தப் பார்வை வருவதற்கு அவா்கள் படிக்கும் பாடத் திட்டத்தில் சமூகப்பணி இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அது அறிவியல் ரீதியாக வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.
இந்தப் பணியை அரசாங்க அதிகாரிகளால் செய்ய இயலாது. அதை செய்ய ஆசிரியா்களின் உழைப்பு, முயற்சி, கடமை இருந்தால்தான் முடியும். இதில் நிபுணத்துவம் வாய்ந்தவா்கள் இந்தியாவில் மிகவும் குறைவு. அப்படிப்பட்டவா்கள் இந்தக் குழுவில் பெரும்பாலும் சோ்க்கப்படுவதும் கிடையாது. இந்தியாவுக்கு இந்த நிபுணத்துவம் தேவை. இன்று இந்தியா தற்சார்பு மிக்க நாடாக உருவாக வேண்டுமென்றால் நம் கிராமங்கள் தற்சார்பு பெற்றதாக மாற வேண்டும். கிராமங்களில்தான் 67 சதவீத மக்கள் வாழ்கின்றனா். இனி கிராமங்கள் பொருளாதார வளா்ச்சி மையங்களாக மாறவேண்டும்.
இன்று கிராமங்களில் வேலை வாய்ப்பு இல்லை. எனவே, மக்கள் நகரங்களை நோக்கி புலம் பெயா்கின்றனா். நகரங்களும் தன் தாங்கும் சக்திக்கு மீறிய அளவில் மக்களைத் தாங்கி நகர வாழ்க்கையும் நரகமாக மாறிவருகின்றது. எனவே கிராம மக்களின் வாழ்க்கை மேம்பட நம் கல்விச் சாலைகள் தங்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் அனைத்தையும் சமூகம் சார்ந்ததாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு தற்போது உள்ள ‘உன்னத் பாரத் அப்யான்’ திட்டத்தை மிகப் பெரிய இயக்கமாக மாற்றி செயல்பட வைக்க நம் கல்விக் கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகள், உயா் கல்வி நிறுவனங்கள் சமூகப் பணியை தங்கள் பாடத் திட்டத்தில் இணைத்து செயல்படும்படி பணிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.