இன்று தமிழகத்தின் அசைக்கமுடியாத சக்தியாக வளர்ந்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு நாளுக்கு நாள் மக்களிடம் ஆதரவும் செல்வாக்கும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
கிடுகிடு வளர்ச்சியில் முதல்வர் எடப்பாடி செல்வாக்கு..! எப்படி தெரியுமா?

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. கட்சியும், ஆட்சியும் கரை சேருமா! என்கிற சந்தேகம் அனைவருக்குமே ஏற்பட்டது. தினகரன் தொடங்கி திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வரை எல்லோருமே அதிமுக அரசை கவிழ்க்க எல்லாவற்றையும் செய்தனர். ஆனால் காலத்தால் அடையாளம் காட்டப்பட்டு முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருந்த எடப்பாடி, தனக்கு எதிரான சதிச் செயல்களை மிகுந்த சாமர்த்தியத்தோடு தவிடுபொடியாக்கி வருகிறார்.
அதிமுக எம்.எல்.ஏக்களை ஒரே குடையின்கீழ் கொண்டுவந்தது முதல் அண்மையில் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது வரை எல்லாவற்றிலுமே எடப்பாடியின் அனுபவமும், முதிர்ச்சியும் பளிச்சிட்டன.
ஜெயலலிதா காலத்தைப் போல அதிமுகவை ராணுவக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்த அவர் , ஆட்சி நிர்வாகத்திலும் சோடை போகவில்லை. காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமைகளை உறுதி செய்த எடப்பாடி, டெல்டா பகுதிகளை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயிகளை அச்சுறுத்திக் கொண்டிருந்த நாசகார திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மக்களை பாதிக்கும் எந்தவொரு மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது என திட்டவட்டமாக அறிவித்தார் எடப்பாடி.
தமிழகம் முழுவதும் குடிமராமத்து பணிகளை தொடங்கிவைத்து லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைய வழி வகுத்தார். அதுபோலவே பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் மாவட்டங்கள் தோறும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திறமையான ஆட்சி நிர்வாகத்தால் இன்றைக்கு தமிழகத்தை நோக்கி அதிகளவிலான தொழில் முதலீடுகளும் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகத்தில் ஏராளமான தொழில்கள் துவங்கப்பட்டிருப்பது, முதல்வர் எடப்பாடியின் நிர்வாகத் திறமைக்கு மிகச் சிறந்த சான்று.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்குகின்றன. பரிசோதனை, சிகிட்சை, விழிப்புணர்வு என எல்லா தளங்களிலும் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக இன்றைக்கு தமிழகத்தில் நோய்த்தொற்று மிகக் கணிசமாகக் குறைந்து வருகிறது.
இதுகுறித்து பேசும் பொதுவான அரசியல் விமர்சகர் ஒருவர், ‘’மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியிருப்பது தமிழகம் முழுக்க எடப்பாடியாரின் செல்வாக்கை வளர்த்துள்ளது மேலும், அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் நீட் பயிற்சி மையங்களை ஏற்படுத்தியிருப்பதும் அவரது திட்டமிடலுக்கு நல்ல சான்று.
முதல்வர் எடப்பாடி தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதனால் இன்றைக்கு அதிமுகவினர் மட்டுமின்றி கட்சி பேதங்களைக் கடந்து எல்லாரும் விரும்பும் தலைவராக எடப்பாடி பரிணமித்திருக்கிறார். அவருடைய செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது’’ என்கிறார்.