அன்று ஸ்டாலின்! சீமான்! திருமா! இன்று அமித் ஷா மற்றும் மோடி! ரஜினி அரசியல் இவ்வளவு தான்!

அமித்ஷாவை மேடையில் பார்த்ததும் ரஜினிகாந்த் புளகாகிதம் அடைந்து, அவரது காஷ்மீர் நடவடிக்கைக்கு வாழ்த்து தெரிவித்தார். அது மட்டுமின்றி அமித்ஷா மற்றும் மோடி இணையை கிருஷ்ணன், அர்ஜூனன் என்றும் புகழ்ந்தார்.


இதைக் கண்ட ரஜினி விமர்சகர்கள், அவர் முழுதாக பா.ஜ.க. ஆளாக மாறிவிட்டார் என்று பதிவிட்டு வருகிறார்கள். மேடைன்னா புகழ்வது ரஜினிக்கு எப்போதும் பழக்கம்தான். அதுக்காக உடனே அவரை கட்சியில் சேர்க்கிறதா என்று அவரது ரசிகர்கள் டென்ஷன் ஆகின்றனர்.

ஏனென்றால், ரஜினி புகழாத தலைவர்கள் யாருமே இல்லை என்பதுதான் உண்மை. நான் மதிக்கும் அரசியல் தலைவர் கலைஞர்! அரசியலில் அவர் ஒரு சாணக்கியர் என்று தி.மு.க. மேடையில் பேசியிருக்கிறார் ரஜினி.

அதே போல், ஜெயலலிதா தமிழகத்தின் தைரியலட்சுமி. அரசியலில் யாராலும் அசைக்கமுடியாத இரும்பு பெண்மணி என்றும் கூறியிருக்கிறார். அட, ஜெயலலிதா மட்டுமல்ல ஸ்டாலினையும் பாராட்டிப் பேசியிருக்கிறார் என்பதுதான் உண்மை. மு.க. ஸ்டாலின், சிறந்த நிர்வாகி. அதை வாய்ப்பு கிடைத்தால் நிருபித்து காட்டுவார் என்று பேசினார்.

இவர்களை மட்டுமின்றி வளர்ந்துவரும் இளம் தலைவர்களையும் ரஜினி விட்டு வைக்கவில்லை. ஆம்,  சீமான் வளர்ந்து வரும் அரசியல் தலைவர். சிறந்த பேச்சாளர் என்று பாராட்டியிருக்கிறார். அதேபோன்று திருமாவளவன் ஒடுக்கபட்ட மக்களுக்காக போராடும் போராளி!

இப்படி எல்லோரையும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மனதார பாராட்டி மகிழ்ந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதுபோன்றுதான் இப்போது பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும்  மனதார பாராட்டியுள்ளார். இதுக்குப் போய் கட்சியில் சேர்வது என்றால், எத்தனை கட்சிகளிதான் சேர்வார் ரஜினி?