கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை, கலைஞர் அரங்கில், தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் இவைதான். ஹிந்தி எதிர்ப்பு விவகாரங்களில் தமிழர்களை உரசிப்பார்க்க வேண்டாம் என்று ஒரு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழர்களை உரசிப் பார்க்காதே! மோடியை மிரட்டும் ஸ்டாலின்!
தீர்மானம் : 1
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தலைவர் கலைஞர் அவர்களின் பிரதிபிம்பங்களாகத் திகழ்ந்திட வேண்டும். மாற்றாரும் மனந்திறந்து போற்றும் மக்கள்தலைவர் கலைஞர் அவர்களின் ஜனநாயகப் பண்புகளையும், இன-மொழி உணர்வுகளையும்,சமத்துவ நெறிகளையும்,சமூகநீதி எண்ணங்களையும், சுயமரியாதைக் கருத்துகளையும் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சிந்தனை - சொல் - செயல் ஆகிய அனைத்திலும் அணுவளவும் பிறழாது அனுதினமும் பின்பற்றி, தலைவர் கலைஞர் அவர்களின் உயிரோட்டம் மிக்க பிரதி பிம்பங்களாக இந்திய நாடாளுமன்றத்திலும் - தொகுதியிலும் திகழ்ந்து, உறவுக்குக் கை கொடுத்து உரிமைக்குக் குரல் கொடுக்கும் வகையில் சீரிய செயலாற்றி, “நாம் என்றும் மக்கள் ஊழியர்களே”என்ற நற்பெயர் பெற வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 2
“மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்”என்ற தனிப் பெரும் முழக்கத்துடன் - கிராமத்தின் திண்ணைகள் முதல் நகரத்தின் தெருக்கள் வரை மக்களைச் சந்தித்து, அனைவரும் வியக்கும் வகையிலான கழகத் தலைவரின் ஆக்கபூர்வமான பிரச்சாரத்தினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்த கூட்டணிக்கு இந்த மகத்தான வெற்றியை தமிழகம் மற்றும் புதுவை மக்கள் அளித்துள்ளார்கள். மதசார்பற்ற கூட்டணி மட்டுமின்றி - அதை வெற்றிக்கூட்டணியாகவும் மாற்றி - தலைமைப் பண்பின் உறைவிடமாகத் திகழுகிறார் கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின். இந்திய ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நாடாளுமன்றத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியாவின் மூன்றாவது தனிப்பெரும் கட்சி என்று கழகத் தலைவர் தளபதி அவர்கள் தலைமையில் கம்பீரமாக நிற்பதை இந்திய ஜனநாயகமும் பார்த்து மகிழ்கிறது - அதை இந்தக் கூட்டமும் எண்ணிப் பெருமிதம் கொள்கிறது.
தீர்மானம் : 3
வாக்காளர்களிடம் வாக்குக் கேட்கச் சென்ற அதே முனைப்புடனும் - ஆர்வத்துடனும், கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் - இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள், ஒவ்வொருவரும் தத்தமது தொகுதிகளில் தவறாமல் வாக்களித்தவர்கள் -வாக்களிக்காதவர்கள் என்ற பேதம் பார்க்காமல், அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்திட வேண்டும். வாக்கு கேட்பது உங்கள் உரிமை. கோரிக்கைகளை முன் வைப்பது வாக்காளர்களின் உரிமை என்பதை நினைவில் வைத்து - திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் - கூட்டணிக் கட்சிகளுக்கும் இந்த மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்த கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், பெருமை சேர்க்கும் வகையில் தொகுதிப் பணி மற்றும் நாடாளுமன்றப் பணியாற்றிட வேண்டுமென்று கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 4
பருவமழை பொய்த்தது முன்கூட்டியே தெரிந்தும், எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காமல், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களையும் நிறைவேற்றாமல், கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் பற்றியே கவலை கொள்ளாமல் “கமிஷன், கரெப்சன், கலெக்சன்”என்பதில் மட்டுமே முழுமூச்சாக ஈடுபட்டு வரும் ஆளும் அதிமுக அரசால் தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒரு குடம் தண்ணீர் 15 ரூபாய்க்கு விற்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகரில் 15 நாட்களுக்கு ஒருமுறை லாரி டேங்கர் மூலம் குடிநீர் சப்ளை செய்யும் நெருக்கடி உருவாகியிருக்கிறது. மாநிலம் முழுவதும் நடைபெறும் மக்கள் போராட்டங்கள் - தாய்மார்கள் சாலை மறியலில் ஈடுபடும் காட்சிகள், குடிநீர்ப் பிரச்சினை எந்த அளவிற்கு தமிழகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
எனவே, தமிழகத்தின் தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்க ஆளும் அ.தி.மு.க. அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மற்றும் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் போன்ற தொலைநோக்குத் திட்டங்களையும் விரைந்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும் இந்த கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 5
புதிய கல்விக் கொள்கை குறித்த ஆய்வு செய்வதற்கான குழு, இந்தியைத் திணிக்கும் மும்மொழித் திட்டத்தை பரிந்துரை செய்து, மத்திய அரசிடம் வழங்கியது. அதன் தொடர்ச்சியாக, இந்தியா முழுவதும் இந்தி கட்டாய பாடம் ஆக்கப்படும் என்ற செய்தி பரவியது. தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எதிர்ப்புக் குரல் கிளம்பியது. அதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர்கள் அந்த அறிக்கையை, பலரையும் கலந்து ஆலோசித்த பிறகுதான், செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்கள். இது தமிழர்களை உரசிப் பார்க்கும் செயலாகும். பன்மொழி, பண்பாட்டோடு விளங்கும் ஒரு நாட்டில் மக்களின் கருத்துகளை அறியாமல் மத்திய அரசு எந்த முடிவையும் மேற்கொள்ளாது என நம்புகிறோம்.
அதைப்போல, தமிழர்களின் உணர்வோடு விளையாட வேண்டாம் என்று மத்திய பா.ஜ.க.அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்வதோடு; தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு முடிவுகளையும், அது எந்த நேரத்தில் வந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகம் ஜனநாயக வழி நின்று மிகக் கடுமையாக எதிர்க்கும் என்பதை இக்கூட்டம் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 6
நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாட வேண்டிய காவிரி டெல்டா மாவட்டங்களை, வறண்ட பாலைவனமாக்கும் விதத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அறிவித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைக்க நினைக்கும் மத்திய பாஜக அரசின் விவசாய விரோத நடவடிக்கைகளையும், அதற்கு அட்சரம் பிசகாமல் துணை போகும் அ.தி.மு.க. அரசையும் இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.