திமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார்? ஸ்டாலின் உடைத்த ரகசியம்!

தி.மு.க.வின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் மறைந்ததை அடுத்து அந்தப் பதவிக்கு ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காக வரும் 29ஆம் தேதியன்று அக்கட்சியின் பொதுக்குழு கூடுகிறது.


இந்நிலையில் இன்று காலையில் தி.மு.க.வின் பொருளாளர் துரைமுருகன் அப்பதவியிலிருந்து விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க. தலைவர் ஸ்டாலினே இன்று முற்பகல் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட துரைமுருகன் விரும்புவதாகவும் அதற்காக பொருளாளர் பதவியிலிருந்து அவர் விலகுவதாகவும் ஸ்டாலின் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி வரும் 29ஆம் தேதியன்று நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலுடன் பொருளாளர் பதவிக்கான தேர்தலும் நடைபெறும் என்றும் ஸ்டாலின் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பொதுச்செயலாளராகும் வாய்ப்பில் துரைமுருகனுடன், அண்மையில் திருச்சி மாவட்ட அமைப்பின் செயலாளர்களில் ஒருவராக இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் நேரு, துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் இ. பெரியசாமி, மைய அரசின் முன்னாள் அமைச்சரும் கொள்கைப்பரப்புச் செயலாளர்களில் ஒருவருமான ஆ.இராசா ஆகியோரின் பெயர்களும் அடிபட்டன.

ஆனால், கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் மிக அணுக்கமான துரைமுருகனுக்கே அதிக வாய்ப்பு என்பதை, இன்றைய அறிவிப்பின் மூலம் ஸ்டாலின் உறுதிப்படுத்தியுள்ளார். இப்போது, பொருளாளர் பதவிக்கான போட்டியில் யார் யார் எனும் ஊகங்கள் கிளம்பியுள்ளன. நேருவோ மற்ற யாருமோ தலைமைக்கு நம்பகமான ஒருவரே அப்பதவிக்கு வரமுடியும் என்பது மட்டும் உறுதி.