எத்தனை பேருக்கு சிறைக் கதவு காத்திருக்கிறதோ..? திகிலில் தி.மு.க. புள்ளிகள்.

ஜெகத்ரட்சகன் மற்றும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீது பல்வேறு வழக்குகள் பாய்ந்திருக்கும் நிலையில், மீண்டும் ஒரு அதிரடியைக் கொடுத்திருக்கிறது அமலாக்கப் பிரிவு.


கனிமொழி, அ.ராசா ஆகியோர் தொடர்பான 2ஜி மேல்முறையீட்டு வழக்கு மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போது வேகமெடுத்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினசரி விசாரிக்கப்பட்டுவரும் சூழல் நிலவுகிறது.

இதேபோல அரக்கோணம் தொகுதியின் திமுக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஜெகத்ரட்சகனின் சொத்துக்களை பெமா சட்டத்தின் கீழ் முடக்கி மத்திய அமலாக்கப் பிரிவு சமீபத்தில் உத்தரவிட்டதும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் இத்தகைய அதிரடிகளின் ஒரு பகுதியாக தற்போது முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதமசிகாமணியின் 8.60 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ளது மத்திய அமலாக்க பிரிவு.

கடந்த 2008 ஆம் ஆண்டு சுமார் 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்தோனேஷியாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ளார் கௌதம சிகாமணி. அதே போல ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நிறுவனத்தில் 22 லட்ச ரூபாய் முதலீடும் செய்தார். இந்த பணப் பரிவர்த்தனைகளை ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பாக மேற்கொண்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அமலாக்க பிரிவு, பெமா சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்தது.

ஐக்கிய அரபு குடியரசில் உள்ள யுனிவர்ஸ் நிறுவனத்தின் மூலம் சுமார் 7 கோடி ரூபாயை 2008-2009 ஆம் ஆண்டு முதல் 2012-13 ஆம் ஆண்டு காலம் வரை லாபத்தொகையை ஈட்டியுள்ளார் சிகாமணி. இதுவும் ரிசர்வ் வங்கி விதிகளுக்கு புறம்பானது என்று அமலாக்க பிரிவு குற்றம்சாட்டியது. இந்த வழக்கு விசாரணையில் இருந்துவந்த நிலையில் தற்போது அமலாக்க பிரிவு மேல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அமலாக்க பிரிவின் இந்த நடவடிக்கை தி.மு.க வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திமுகவைச் சேர்ந்த சில முன்னணி பிரமுகர்களுக்குச் சொந்தமான இடங்களில் விரைவில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தவிருப்பதாக கசிந்துவரும் செய்திகள் இந்த அதிர்ச்சியை மேலும் அதிகப்படுத்தியிருக்கின்றன.

ஆக, தேர்தல் நெருக்கத்தில் இன்னும் எத்தனை பேர் மீது வழக்குகள் பாயப்போகிறதோ, எத்தனை பேர் சிறையில் வாடப் போகிறார்களோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் தி.மு.க புள்ளிகள்.