சரவணனால் வில்லங்கத்தில் சிக்கியதா தி.மு.க.! இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்துக்கு என்ன தண்டனை..?

சரவணனால் வில்லங்கத்தில் சிக்கியதா தி.மு.க


தொலைக்காட்சி விவாதத்தில் தி.மு.க. சார்பில் கலந்துகொண்ட சரவணன் என்பவர், ‘காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது இல்லை’ என்ற ரீதியில் கருத்து சொல்லப்போக, என்.ஐ.ஏ. சட்டப்படி கைது செய்யப்படும் அபாயத்துக்கு ஆளாகியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

உடனே பயந்துநடுங்கியபடி இன்று அவர் ஒரு விளக்கம் அனுப்பியிருக்கிறார்.  கழக சட்டதிட்ட திருத்தக்குழு இணைச் செயலாளராக இருக்கும் வழக்கறிஞர் அ.சரவணன் விளக்கம் இது. கடந்த 12.08.2019 ரிபப்ளிக் டீவியில் காஷ்மீர் விவகாரம் பற்றிய விவாதத்தில், திமுகவின் சார்பாக கலந்துக்கொண்டேன். அந்த விவாதத்தின் பொழுது, திமுகவின் நிலைப்பாடு பற்றி விளக்கிய பின், காஷ்மீர் பற்றிய வரலாற்றை பேச முற்படுகையில், காஷ்மீர் முன்பு இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கவில்லை என்று சொன்னவுடன், நெறியாளர் அர்னாப் கோஸ்வாமி மேற்கொண்டு பேச விடாமல் கடுமையான வார்த்தைகளால் தாக்க ஆரம்பித்தார். மற்ற பங்கேற்பாளர்களும் அவருடன் சேர்ந்து கடும் சொற்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். 

அர்னாப் கோஸ்வாமி விளக்கம் சொல்ல வேண்டுமென்று சொல்லிவிட்டு, விளக்கம் கொடுக்க வாய்ப்பளிக்காமல், நான் பேசியதை திரித்துக்கூறினார். இந்தியா சுதந்திரம் அடையும்பொழுது காஷ்மீர் இந்தியாவுடன் இல்லை. அதன் பின்னரே ராஜா ஹரிசிங், இந்தியாவுடன் சில நிபந்தனைகளோடு இணைந்துக்கொள்ள ஒரு ஒப்பந்தம் போடுகிறார். இதைத்தான் சொன்னேன்.

ஆனால், அந்த விவாதத்தில் மேற்சொன்ன கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பளிக்காமல், தொடர்ந்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதால், அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேன். சுமார் 16 நிமிடங்கள் அந்த விவாதத்தில் பங்கு பெற்றேன். சமூக வலைதளங்களில் பாஜகவினர், பாதியில் வெளியேறிய திமுக வக்கீல் சரவணன் என போட்டோ ஷாப் செய்து பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

நான் ஏதோ காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமான பகுதி அல்ல என சொன்னது போல பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது பாஜக. முழு வீடியோவையும் வெளியிடாமல், வெட்டியும், ஒட்டியும் வழக்கம்போல் இறங்கியுள்ளனர் பொய் புரட்டு பா.ஜ.க.வினர். 

விளக்கம் சொல்ல விடாமல் மற்ற பாஜகவின் பங்கேற்பாளர்கள்,  கூச்சல் போட்டு பேச விடாமல், தொடர்ந்து கடும் வார்தைகளால் தாக்கினர். விளக்கம் சொன்ன பிறகும் மீண்டும் அதே கேள்வியை திரித்து கேட்டதால் “உங்களின் பலியாடு நான் அல்ல” என்று வெளியேறினேன் என்று கூறியிருக்கிறார்.

சரவணன் விவகாரத்தினால் தி.மு.க.வுக்கு சிக்கல் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.