ரெய்டு மேல் ரெய்டு… நீதிமன்ற அட்டாக்…. அச்சத்தில் தி.மு.க. தலைவர்கள்

பதவியில் இல்லை என்றாலும் ஏதேனும் வம்பு, வழக்கு என்றால் அது நிச்சயம் தி.மு.க.வினர் வேலையாகத்தான் இருக்கும். அதனால்தான் எந்த ஒரு ரெய்டு என்றாலும் அதில் தி.மு.க.வினரே சிக்குகிறார்கள்.


திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான இடங்களில் எம்.பி தேர்தல் சமயத்திலும், அதன் பின்னரும் வருமான வரித்துறையும், அமலாக்கப் பிரிவும் அடுத்தடுத்து சோதனைகளை நடத்தின. இந்த சோதனைகளில் கணக்கில் வராதா ஏராளமான பணம் கைப்பற்றப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக திமுக எம்.பி ஜெகத்ரட்சகனின் முறைகேடான வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுத்தது. பல கோடி ரூபாய் பெறுமதியான அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டன.

இதேபோல முறைகேடான வெளிநாட்டு முதலீடு குற்றச்சாட்டிற்கு ஆளான திமுக துணை பொதுச் செயலாளர் பொன்முடியின் மகனும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணியின் சொத்துக்களையும் அமலாக்க பிரிவு முடக்கியது.

இதன் தொடர்ச்சியாக கோவை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பையா கவுண்டருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அண்மையில் சோதனை நடத்தியது. இந்த சோதனைகளில் பல கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து அடுத்த அதிரடி யார் மீது என்பதுதான் தி.மு.க. பிரமுகர்கள் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. அதேபோன்று 2ஜி வழக்கு, ஸ்டாலின் மீதான கொளத்தூர் தேர்தல் வழக்குகளும் வேகமெடுத்துள்ளன. 

இந்த நிலையை எப்படி கையாள்வது என்று புரியாமல் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்களை டெல்லியில் சந்தித்த சபரீசன், சீற்றத்தைத் தணித்துக்கொள்ளுமாறு மன்றாடியிருக்கிறார். ஆனால் டெல்லி தலைவர்கள் பிடி கொடுக்கவில்லையாம். ஆக, அதிரடி தொடர்கிறது.