தி.மு.க.வில் நாடார் சமுதாயம் மட்டும் புறக்கணிக்கப்படுவது ஏன்..? வைரலாகும் பதிவு.

தி.மு.க.வில் பொதுக்குழு முடிவடைந்து முக்கியமான நபர்களுக்கு எல்லாம் பதவிகள் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், நாடார்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை என்ற பதிவு வைரலாகிவருகிறது. இதோ, அந்த பதிவு.


இன்று நடந்து முடிந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர், பொருளாளர் என்ற இரு தலைமை பதவிகள் மட்டுமின்றி கட்சியின் சட்டதிட்டங்களில் மாற்றம் செய்து வழக்கத்திற்கும் கூடுதலாக இரண்டு துணைப் பொதுச்செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆக, முறையே வன்னியர், தேவர், கவுண்டர், ரெட்டியார், அருந்ததியர் மற்றும் பறையர் இனங்களைச் சேர்ந்த பிரமுகர்கள் திமுகவின் தலைமைப் பொறுப்புகளான பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச்செயலாளர்கள் எனும் பொறுப்புகளை இனி வகிப்பார்கள்.

அனைத்து சாதியினரையும் திருப்திப் படுத்தும் வகையில் இந்த பொறுப்பாளர்கள் திமுகவில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டதாகவே வைத்துக் கொண்டாலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பிரதானமாக இருக்கக்கூடிய நாடார் சமுதாயத்திற்கென பிரதிநிதித்துவம் தர திமுக தலைமை தவறிவிட்டது என நாடார் சமுதாய மக்களிடையே ஒரு பெரும் அதிருப்தி நிலவ ஆரம்பித்துள்ளது. இந்த அதிருப்தி வரும் காலங்களில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக ஆட்சியில் அமர்ந்த காலம் தொட்டே நாடார் சமூக வாக்குகள் பெருமளவில் திமுகவிற்குத்தான் இதுவரை கிடைத்து வந்துள்ளது. இந்த நிலைப்பாட்டிற்கு அதிமுகவிற்கென மேலோங்கி நின்ற முக்குலத்தோர் ஆதரவும் ஒரு முக்கிய காரணம்.

எனவே தான் தமிழகமெங்கும் பரவலாக வசிக்கக்கூடிய நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கான நன்மைகளை தடையின்றி செய்யக்கூடிய இயக்கமாக திமுகவை மனதில் வடித்துக்கொண்டு தலைமுறைகளை கடந்து திமுகவிற்கு வாக்களித்தனர்.

ஆனால் இன்றைய திமுக பொதுக்குழு காட்டுவதென்ன? காலந்தோறும் தங்கள் கட்சிக்கு பெரும்பாலான வாக்குகளை அள்ளித் தந்த நாடார் சமுதாயம் புறக்கணிக்கப்படுகிறது என்றே அவர்கள் எண்ணுகின்றனர். திமுகவின் நாடார் சமுதாய பிரதிநிதியாக அறியப்பட்டு வந்த சற்குணப்பாண்டியன் மறைந்த பிறகு அவர்களுக்கான அங்கீகாரம் தற்போது வழங்கப்படவில்லை என்பதே அந்த சமுதாயத்தின் மனக்குமுறல்.

வரும் தேர்தலில் இதற்கான தகுந்த பதிலை திமுகவிற்கு தரவேண்டும் என அந்த சமுதாயத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் முடிவெடுக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. திமுக தலைமை என்ன செய்யப்போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்