கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களை தங்கள் கட்சியில் இணைப்பதில்லை என்பதுதான் பெரிய கட்சிகளின் நீண்ட நாள் நிலைப்பாடு. ஆனால், இதனை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவரை தி.மு.க. தங்கள் கட்சியில் இணைத்திருக்கும் விவகாரம் பெரும் வில்லங்கமாகியுள்ளது.
விடுதலை சிறுத்தைகளைத் தூக்கிய தி.மு.க.! கடும் கோபத்தில் திருமாவளவன்.

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இருந்த ஒரே ஊராட்சித் தலைவரை, அனிதா ராதாகிருஷ்ணன் தி.மு.க.வில் இணைத்துவிட்டார். இந்த விவகாரம்தான் சிறுத்தைகளிடம் கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது.
இது பற்றி வி.சி மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், அனிதாவிடம் கேட்க, வார்த்தை யுத்தம் வெடித்திருக்கிறது. தொடர்ந்து அனிதாவின் ஆட்கள் முரசு தமிழப்பனை மிரட்டியிருக்கிறார்கள். இதுபற்றி அவர் போலீசில் புகார் செய்தும் பலனில்லை. அதேநேரம் அனிதா தரப்பிலிருந்து புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ், முரசு தமிழப்பனிடம் விசாரணை நடத்தியது.
அனிதாவைக் கண்டித்து சிறுத்தைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஏற்பாடு செய்த வேம்படி முத்து என்பவர் அனிதா ஆட்களால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் போலீஸாரையும் விடுதலை சிறுத்தைகளையும் மிரட்டும் வகையில் பேசினார் அனிதா ராதாகிருஷ்ணன். இந்த விவகாரம்தான், இப்போது மாநில அளவில் திருமாவளவனிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி கூட்டணிக் கட்சியை உடைப்பது நியாயம்தானா என்று ஸ்டாலின்தான் சொல்ல வேண்டும்.