இந்தியாவிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வி! தேமுதிகவை வச்சி செஞ்ச மக்கள்!

அது ஒரு காலம். அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றுக் கட்சியாக அத்தனை பேரும் விஜயகாந்தை நம்பினார்கள். கட்சிக்குக் கொள்கை என்றெல்லாம் எதையும் அறிவிக்காமல் தேர்தலில் இறங்கி கலக்கினார் விஜயகாந்த். இளைய பட்டாளம் அவருக்குப் பின்னே அணிவகுத்து நின்றது.


ஆண்டவனோடும், மக்களோடும்தான் கூட்டணி என்ற விஜயகாந்த், எப்போது சொன்னதை மறந்தாரோ, அப்போதே அவருக்கு அழிவு ஆரம்பமானது. கடந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி மூலம் முதல்வர் ஆகமுடியும் என்று நம்பி ஏமாந்தார். இந்த முறை, என்ன நடக்கிறது என்று தெரியாமலே கட்சி தோல்வியில் ஒரு சாதனை படைத்திருக்கிறது.

ஆம், இந்தத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த பெரிய கட்சி தே.மு.தி.க. மட்டும்தான். இதோ அவர்கள் வாங்கிய வாக்கு வித்தியாசத்தைப் பாருங்கள். வடசென்னையில் - 4,61,518 வாக்குகள். திருச்சியில் 4,59,286 வாக்குகள். கள்ளக்குறிச்சியில்- 3,99,919 வாக்குகள். விருதுநகரில் 1,54,554 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது தே.மு.தி.க. வாங்கிய வாக்குகளின் சதவீதம் 2.19 மட்டும்தான். நாம் தமிழர் கட்சி கூட 3.87% வாங்கியிருக்கும்போது 2.19% மட்டுமே தே.மு.தி.க. பெற்றுள்ளது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நோட்டா கூட 1.28% ஓட்டு வாங்கியிருக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் பிரேமலதாவின் மோசமான அணுகுமுறை என்கிறார்கள். யாரையும் அனுசரித்துப் போகாமல், தான் எடுக்கும் முடிவுதான் காரணம் என்று குதித்ததால் வந்த வினை என்கிறார்கள். ஸ்டாலின் பேச்சுவார்த்தைக்கு வந்தபோதே பேசி முடித்திருந்தால் இந்த நேரம் எம்.பி. பதவியாவது கிடைத்திருக்கும். என்ன செய்வது பிரேமலதா ராசி அப்படி!

இப்போது மக்கள் நல கூட்டணியின் தோல்விக்கும் பிரேமல்தான் காரணம் என்று சொல்கிறார்கள். ஏனென்றால், ம.தி.மு.க., கம்யூ., பா.ம.க. வி.சி.க. போன்ற கட்சிகள் தேர்தலில் தோற்றாலும் களத்தை இழக்க மாட்டார்கள். எப்போதும் போராடிக்கொண்டு இருப்பார்கள். ஆனால், தேர்தலுக்கு மட்டும் தலை காட்டும் தே.மு.தி.க. தன்னுடைய போக்கை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் கட்சியைக் கலைக்க வேண்டியதுதான்.