பெங்களூரு: நல்ல பாம்புக்கு லிப் லாக் தர முயன்ற இளைஞரின் வாயை பாம்பு கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படம் எடுத்து ஆடிய நல்ல பாம்புக்கு உதட்டு முத்தம் கொடுத்த இளைஞன்..! பிறகு அரங்கேறிய பகீர் சம்பவம்!

கர்நாடகா மாநிலம் பத்ராவதி பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில் நல்ல பாம்பு நுழைந்துவிட்டதால், அதனை பிடிப்பதற்காக, பாம்பு பிடி வீரரான சோனு என்ற இளைஞருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உள்ளூர் இளைஞரான சோனு அப்பகுதியில் பாம்புகளை பிடிப்பது வழக்கமாகச் செய்து வருகிறார்.
இதன்படி, குறிப்பிட்ட வீட்டில் நுழைந்த நல்ல பாம்பை சிறிது நேரம் போராடி, சோனு உயிருடன் பிடித்தார். ஆனால், அந்த நேரத்தில் அவருக்கு மூளை குழம்பிப் போனது போல ஒரு ஐடியா தோன்றியது. இதன்படி, கையில் பிடித்த நல்ல பாம்பின் வாயோடு வாய் வைத்து லிப் லாக் செய்ய சோனு முயன்றார்.
இந்த விபரீத முயற்சியை அருகில் இருந்தவர்கள் செல்ஃபோனில் படம்பிடிக்க, சோனு உற்சாகமாக இளம்பெண்ணிற்கு முத்தம் தருவதுபோல, வாயை குவித்துக் கொண்டு நல்ல பாம்பின் உதட்டை தொட்டார். அவ்வளவுதான், அந்த பாம்பு பாய்ந்து அவரது வாயை கவ்விப் பிடித்து, வெடுக்கென கடித்து குதறியது. இதில் விஷம் தலைக்கேறி, வாய் முழுக்க ரத்தக் காயத்துடன் சோனு அங்கேயே மயங்கி விழுந்தார். உடனடியாக, பாம்பு தப்பியோடிவிட்டது.
உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த சோனுவை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் இருந்து சோனு மீண்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக, பாம்பின் பின்புறம் இருந்துதான் முத்தமிடுவார்கள், ஆனால், சோனு சற்று விபரீதமாக நேருக்கு நேராக பாம்பின் முகத்தில் முத்தம் தர முயன்றது விபரீதத்தில் முடிந்துள்ளது.