160 நாடுகள்..! 200 ஊழியர்கள்..! ரூ.700 கோடி பிசினஸ்..! வெறும் பிளஸ் டூ படித்துவிட்டு சாதித்த கடலூர் தமிழன்!

பட்டப் படிப்பு இல்லாமல் பணி அனுபவத்தை வைத்து சுயமாக கம்பெனி ஒன்றை துவங்கி, தற்போது 700 கோடி மதிப்பிலான நிறுவனத்திற்கு அதிபராகி அசத்தியுள்ளார் சுரேஷ் சம்பந்தம் என்பவர்.


கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் சம்பந்தம் என்பவர் 1990ஆம் ஆண்டு ப்ளஸ் டூ முடித்துவிட்டு, பட்டப்படிப்பு படிக்க மனதும், குடும்பச் சூழலும் சரியாக அமையாததால் அத்துடன் படிப்பை நிறுத்திவிட்டார்.  

கணிப்பொறி அறிவியல் மீது அளப்பரியா ஆர்வம் கொண்டிருந்ததால், அதனை சுயமாக தேடித்தேடி கற்றுக் கொண்டார். கற்றுக்கொண்டதை வைத்து பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார்.  

இந்த பணியில் கிடைத்த அனுபவத்தை கொண்டு 'ஆரஞ்சு ஸ்கேப்' என்ற புதிய நிறுவனம் ஒன்றை சுரேஷ் சம்பந்தம் துவங்கியிருக்கிறார். காலகட்டத்திற்கு ஏற்ப தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்ததால் தற்போது இவரது நிறுவனம் சுமார் 700 கோடி மதிப்பிற்கு உயர்ந்துள்ளது. 

சுமார் 160 நாடுகளில் இவரின் சேவைக்கு வாடிக்கையாளர்கள் இருக்கின்றனராம். கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக இருப்பதாக சுரேஷ் சம்பந்தம் நம்மிடம் தெரிவிக்கிறார். 

தற்போது இவரது ஆரஞ்சு ஸ்கெப் நிறுவனத்தில் 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவரது நிறுவனம் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது.  

துடிப்புடன் செயல்பட்டு பட்டப்படிப்பு கூட இல்லாமல் சொந்த அறிவை வைத்து முன்னேறி வந்ததால், பல இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் இருக்கிறார். இவரின் இந்த அதீத செயல்பாட்டிற்கு விகடன் குழுமம் 'சிறந்த ஸ்டார்ட்அப் சாதனையாளர்' என்ற விருதை வழங்கி கௌரவித்தது. 

பட்டப் படிப்பு படிக்க முடியாமல் வளரத் துடிக்கும் இளைஞர்களுக்கு பயிற்சிகளையும் இவர் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.