நாடாளுமன்ற தேர்தலில் வென்று எம்பியான பிறகு தயாநிதி மாறனின் நடவடிக்கைகள் ஸ்டாலினையே ஓவர் டேக் செய்வது போல் உள்ளதாக திமுகவினர் கிசுகிசுத்து வருகின்றனர்.
இந்தி எதிர்ப்பில் ஸ்கோர்! மோடி முன்பு போர்! திமுக தலைவர் பதவிக்கு தயாநிதி குறி!

நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னையில் போட்டியிட்டு பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர் தயாநிதி மாறன். நாடாளுமன்றம் சென்று எம்பியாக பதவி ஏற்பதற்கு முன்னரே தமிழக அரசியலையே ஆட்டிப்பார்க்கும் ஒரு செயலில் ’ஈடுபட்டார்.
தெற்கு ரயில்வேயில் அதிகாரிகள் இடையிலான தகவல் தொடர்பு இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கைக்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டவர்கள் கூட வெறும் அறிக்கைகள் வெளியிட்டு அமைதியாகினர்.
ஆனால் தயாநிதிமாறனோ திமுக மாவட்டச் செயலாளர் சேகர் பாபுவை அழைத்துக் கொண்டு நேராக தெற்கு ரயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்டார். மேலும் அதிகாரிகளை சந்தித்து இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்கிற சுற்றறிக்கையை ரத்து செய்யும் அளவிற்கு நிர்பந்தம் கொடுத்து அதில் வெற்றியும் பெற்றார்.
தயாநிதிமாறன் இப்படி ஒரு போராட்டத்தை முன்னெடுத்த போது திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் இல்லை. அவருடைய அனுமதியை போனில் பெற்ற தயாநிதி மாறன் சாதாரண போராட்டம் என்கிற தோரனையை ஏற்படுத்தி அதனை ஒரு மிகப்பெரிய போராட்டமாக்கி பட்டி தொட்டி எங்கும் தன்னை பற்றி பேச வைத்தார்.
இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எம்பியாக பதவி ஏற்கும் போது தமிழ் வாழ்க என்று கூறி அவர் பதவி ஏற்றது இந்திய அளவில் டிரென்டானது. மேலும் அவரை பின்பற்றி திமுக எம்பிக்கள் அனைவருமே அப்படி பதவி ஏற்க ஆரம்பித்தனர். இதன் மூலம் இந்திய அளவில் பேசு பொருள் ஆனார் தயாநிதி.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசிய தயாநிதி மாறன், மத்திய, மாநில அரசுகளை தெறிக்கவிட்டார். மோடி அவையில் இருந்த நிலையிலும் சிறிதும் தயக்கம் இல்லாமல் பாஜக, அதிமுக அரசுகளை கடுமையாக விமர்சித்தார் தயாநிதி.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபடும் அளவிற்கு நிலைமை நாடாளுமன்ற மக்களவையில் மோசமானது. மேலும் தயாநிதிமாறன் பேசிய சில விஷயங்கள் அவைக்குறிப்பில் இருந்து கூட நீக்கப்பட்டது. அதோடு மட்டும் அல்லாமல் மோடி பேசிய போது தயாநிதி மாறன் பெயரை குறிப்பிட்டு பேசியது ஹைலைட்.
கடந்த இரண்டு முறை எம்பியாக மட்டும் அல்லாமல் அமைச்சராகவும் இருந்த தயாநிதி மாறன் அப்போது எல்லாம் டெல்லியை தாண்டி அரசியல் செய்தது இல்லை. ஆனால் இந்த முறை வீதியில் இறங்கி போராட்டம் ஆர்பாட்டம் என்று அவர் களம்காண்பது திமுகவில் தன்னை ஒரு முக்கிய பிரமுகராக அடையாளப்படுத்திக் கொள்ள என்கிறார்கள்.
மேலும் எதிர்காலத்தில் திமுக தலைவர் பதவியை குறி வைத்து கூட தயாநிதி மாறன் தற்போதே காய் நகர்த்தலாம் என்றும் திமுகவினரே பேசிக் கொள்கிறார்கள். எம்பியான ஒரு மாதத்திற்குள் 3 விஷயங்களில் தயாநிதி மாறன் பெயர் பாசிட்டிவாக அடிபட்டுள்ளது திமுகவிற்கு சாதகமான அம்சமாக இருந்தாலும் ஸ்டாலினுக்கு அப்படி இல்லை என்கிறார்கள்.