தன்னிடம் பேசாமல் இருந்த மகளை மீண்டும் பேச வைப்பதற்காக குளத்தில் இறங்கி தூர்வாரிய சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழச்செய்தது.
6 மாதமாக பேச மறுத்த மகள்! மகள்கள் தினத்தில் குளத்தில் இறங்கி தந்தை செய்த செயல்! ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!
திருவாரூர் மாவட்டம் மருதானம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவருக்கு சிவானந்தம் மற்றும் நதியா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சிவகுமாருக்கு குடிபழக்கம் இருப்பதால் மனைவியிடம் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இதனை கண்ட மகள் நதியா மிகவும் மன வேதனைப்பட்டு தந்தையுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.
இதை தெரிந்து கொண்ட சிவகுமார், மகளிடம் பேச பல முயற்சிகள் எடுத்தும் பலனளிக்கவில்லை. இறுதியில் நதியாவிடம் சென்று, உன்னை பேச வைக்க நான் என்ன செய்ய வேண்டும்? என மனமார கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த நதியா, நான் தினமும் பள்ளிக்கு சென்று வரும் பகுதியில் இருக்கும் குளம் மிகுந்த மாசடைந்துள்ளது. இதை இறங்கி சுத்தம் செய்தால் மட்டுமே உங்களுடன் பேசுவேன்..! என செல்லமாக கட்டளையிட்டுள்ளார்.
மகளின் கட்டளையை ஏற்றுக்கொண்ட சிவகுமார், உலக மகள்கள் தினத்தன்று இக்காரியத்தை நிறைவேற்றியிருக்கிறார். குடிப்பழக்கத்தையும், மனைவியிடம் சண்டை போடுவதையும் விட்டுவிடுகிறேன் எனவும் உறுதியளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல, தந்தை-மகள் இடையே இருக்கும் பாசத்தை கண்டு நெகிழச் செய்துள்ளது.