மோடி ஆட்சியில் லஞ்சம் குறைந்திருக்கிறதா? அதிர்ச்சி தரும் சர்வே ரிப்போர்ட்!

'ட்ரான்ஸ்பரன்ஸி இண்ட்டர்நேஷனல்' என்பது ஊழலுக்கு எதிரான உலகலாவிய இயக்கம்.


அவர்கள் இந்தியா உட்பட16 நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் லஞ்சம் கொடுப்பதைப் பற்றி ஒரு சர்வே எடுத்திருக்கிறார்கள். அதில் சில ஆச்சரியமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தியாவில் 41% பேர் தாங்கள் லஞ்சம் கொடுத்திருப்பதாக ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.அதில் காவல்துறையின் கையே ஓங்கி இருக்கிறது.50% பேர் அப்படிக் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். அதற்கடுத்த இடத்தில் அரசு அலுவலகங்கள் இருக்கின்றன. இதற்குப் பின்னால்தான் கவுன்சிலர்கள் போன்ற சோட்டா அரசியல்வாதிகள் வருகிறார்கள்.

இன்னொரு சுவாரசியமான விஷயம் இளைஞர்களிடம்தான் அதிகம் லஞ்சம் வாங்கப்படுகிறதாம்.35 வயதுக்கு உட்பட்டவர்களில் 34% பேர் லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள்.வயது கூடக்கூட இது குறைகிறது. 35-55 வயதுக்கு உட்பட்டவர்களில் 29% பேரிடமும்,அதற்கு மேற்பட்ட வயதினரில் 19% பேரும் மட்டுமே லஞ்சம் கொடுத்ததாகச் சொல்லி இருக்கிறார்கள்.

லஞ்சம் இந்தியாவில் ஆண்-பெண் சமத்துவத்தை கொண்டுவந்து இருக்கிறது. கடந்த ஓராண்டுக்குள் லஞ்சம் கொடுத்து இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு,ஆண்களில் 30% பேரும்,பெண்களில் 27% பேரும் 'ஆம்' என்று பதில் அளித்திருக்கிறார்கள்.கடைசி ஓராண்டில் நீங்கள் எந்த இடத்தில் லஞ்சம் கொடுத்தீர்கள் என்கிற கேள்வியில் முதலிடம் பெற்றிருப்பது மருத்துவமனைகள்!.

ஆவணங்கள் வழங்கும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் எல்லாம் இதை தொடர்கின்றன. காவல் துறை இதில் நான்காவது இடத்தில்தான் இருக்கிறது.லஞ்சம் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள்  2% பேர் மட்டுமே.எங்களுக்கு அதற்கெல்லாம் டைமில்லை என்பவர்கள் 11%,யாரையும் திருத்த முடியாது என்பவர்கள் இன்னொரு 11%பேர்.ஏன் புகார் செய்யவில்லை என்கிற கேள்விக்கு அதிகப்டடியான மக்கள் தேர்ந்தெடுத்து இருக்கும் ஆப்ஷன் 'நமக்கேன் வம்பு' என்பதைத்தான்.