சென்னை: கார்ப்பரேட் நிறுவனங்கள், திருநங்கைகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்க முன் வரவேண்டும் என, சம்யுக்தா விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கார்ப்பரேட் கம்பெனியில் மிக உயரிய பதவி! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த திருநங்கை சம்யுக்தா!
உணவு டெலிவரி தொழிலில் முன்னிலை வகிக்கும் ஸ்விக்கி நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப திட்ட மேலாளர் பதவிக்கு, சம்யுக்தா விஜயன் என்ற திருநங்கை நியமிக்கப்பட்டுள்ளார். திருநங்கை ஒருவர் கார்ப்பரேட் பணியில் இத்தகைய அங்கீகாரம் பெறுவது இதுவே முதல்முறையாகும்.
இதுபற்றி ஸ்விக்கி நிறுவனம் குறிப்பிடுகையில், எல்ஜிபிடி சமூகத்தினருக்கு உதவும் வகையில், சம்யுக்தாவிற்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர், வெளிநாடுகளில் தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிந்தவர் என்பதால், ஸ்விக்கி நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பு செய்வார், என்று கூறியுள்ளது.
தனக்கு கிடைத்த வாய்ப்பு பற்றி ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ள சம்யுக்தா, ''என் திறமையை மதித்து உரிய அங்கீகாரம் அளித்த ஸ்விக்கி நிறுவனத்திற்கு உரிய பங்களிப்பை நான் செய்வன். எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. என்னைப் போல பல திறமைசாலி திருநங்கைகள் போதிய வாய்ப்பு கிடைக்காமல் கடும் வாழ்க்கை போராட்டத்தில் உள்ளனர்.
திருநங்கைகளை முறையாக ஒருங்கிணைத்து, அவர்களுக்கும் போதிய வேலைவாய்ப்பு பயிற்சி அளித்து, அவர்கள் படிப்பிற்கு ஏற்ற வகையில் உரிய வேலை அளிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் உதவ வேண்டும். அப்படிச் செய்தால், திருநங்கைகளுக்கு பெரிய உதவியாக இருக்கும்,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருநங்கைகள் அரசுப் பணி, காவல் பணி, நீதிபதி கூட ஆன நிலையில் தனியார் பெரு நிறுவனங்களில் அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்தது. ஆனால் அவற்றை எல்லாம் உடைத்து நொறுக்கி சம்யுக்தா ஸ்விக்கி எனும் கார்ப்பரேட்டில் உயர் பதவியில் அமர்ந்து மற்ற திருநங்கைகளுக்கு முன்னோடியாகியுள்ளார்.