படுவேகத்தில் பரவும் கொரானா...! சூப்பர் மார்க்கெட்டுக்கு திரண்டு பொருட்களை வாங்கி குவிக்கும் மக்கள்! ஏன் தெரியுமா?

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பரவி வருவதால், ஓட்ஸ், உலர் வகை பழங்கள் விற்பனை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.


சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், உலக மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். பொது இடங்களில் மக்கள் .நடமாட்டம் குறைய தொடங்கியுள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர பயப்படுகிறார்கள். இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது.  

இதுவரை 152 பேர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மேலும், 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் அமெரிக்கர்களிடையே அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, மக்கள் மளிகை பொருட்களை அதிகளவில் முன்கூட்டியே வாங்கி வீட்டில் சேமித்து வைக்க தொடங்கியுள்ளனர். எனவே, ஓட்ஸ், உலர்வகை பழங்கள், பிரெட்ஸல் மற்றும் பூனை உணவுகள் உள்ளிட்டவற்றை அமெரிக்கர்கள் அதிகமாக வாங்குகின்றனர். அத்துடன், ஹேண்ட் சானிட்டைஸர் விற்பனையும்

சக்கை போடு போட தொடங்கியுள்ளது. இந்த வகை பொருட்களின் விற்பனை 1,400% உயர்வடைந்துள்ளதாக, நீல்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. பல இடங்களில், சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைகளில் நீண்ட வரிசையில் மக்கள் நின்று பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். ஷாப்பிங் அதிகரித்துள்ளதால், பெரும்பாலான கடைகளில் கையிருப்பில் உள்ள அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள்

முழு வீச்சில் விற்று தீர்கின்றன. சில பிரபலமான சூப்பர் மார்க்கெட்களில் பொருட்கள் ஏதும் கைவசம் இல்லை. ஸ்டோர் ரூம்கள் கூட காலியாகிவிட்டன. கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அந்தளவுக்கு கொரோனா பீதியால் மக்களின் ஷாப்பிங் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக, நீல்சன் குறிப்பிட்டுள்ளது.

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், திசு பேப்பர், குடிநீர் போத்தல்கள், மாஸ்க், சானிட்டைசர் போன்ற மருந்துப் பொருட்களுக்கான தேவை பன்மடங்கு உயர்ந்துள்ளதால், அவற்றை கொள்முதல் செய்ய முடியாமல் சூப்பர் மார்க்கெட் நடத்துவோர் திணறுகின்றனர்.

அமெரிக்கர்களின் இந்த அதீத ஷாப்பிங் ஆர்வம் காரணமாக, சூப்பர் மார்க்கெட்கள் கொள்ளையடிக்கப்பட்டது போல காணப்படுகின்றன. பலர் தங்களது வீடு முழுக்க பொருட்களை வாங்கி அடுக்கி, மினி குடோன் போல மாற்றிவிட்டனர். கொரோனா வருகையால் ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும், அமெரிக்கர்களின் ஷாப்பிங் அதிகரித்துள்ளதால்,

தங்களது விற்பனை வருமானமும் அதிகரித்துள்ளதாக, அன்றாட பயன்பாட்டுப் பொருட்கள் விற்பனையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.