உச்சக்கடத்தை அடைந்த கொரோனா உயிரிழப்பு! இன்று ஒரே நாளில் 44 பேர்!

இன்று பதிவான கொரோனா உயிரிழப்புகள் 44 ! கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 44 பேர் எனப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நலவாழ்வுத் துறையின் அன்றாட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாநில அளவில் இன்று மட்டும் 1,843 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரில் சென்னையில் மட்டுமே 1,257 பேர் உள்ளனர். மாநில அளவில் இதுவரை 46,504 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

இன்று குணமாகி வீடுதிரும்பிய 797 பேர் உள்பட, 25,344 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதுவரை 7,29,002 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்று நலவாழ்வுத் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய மொத்த உயிரிழப்புகளில் நான்கில் ஒரு பங்கினர், எந்தவித நாள்பட்ட கோளாறோ உடல்நலிவோ இல்லாதவர்கள் என்பது முக்கியமானது. இவர்களில் 34 வயது ஆண், 35 வயது பெண், 41 வயது, 42 வயது கொண்ட ஆண்களும் அடங்குவர்.  

உயிரிழப்புகளைப் பதிவுசெய்வது தொடர்பாக அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நிலையில், இறப்புப் பதிவும் அறிவிப்பும் தொடர்ச்சியாக குறைபாட்டுடனே இருந்துவருகிறது. நேற்று முந்தினம் நிகழ்ந்த இறப்புகளையும் இன்றைய அறிக்கையிலேயே அளித்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.