சூயிங்கத்தை காட்டினால் அன்லாக் ஆகும் ஸ்மார்ட் ஃபோன்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

டெல்லி: வெறும் சூயிங்கம் காட்டினாலே, ஃபோன் அன்லாக் ஆகிடும் என்று, நோக்கியா பற்றிய புதிய வீடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது.


நோக்கியா நிறுவனம், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பில் மீண்டும் முழுவீச்சில் ஈடுபட தொடங்கியுள்ளது. அதேசமயம், ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டாளர்களிடையே, ஃபிங்கர் பிரின்ட் சென்சார் மூலமாக,  ஃபோனை அன்லாக் செய்து பயன்படுத்தும் முறை பிரபலமாகி வருகிறது. இதைச் செய்யக்கூட பலர் சோம்பல் காட்டுவதால், டிஸ்பிளே பகுதியிலேயே, ஃபிங்கர் பிரின்ட் சென்சார் வைத்து, தற்போது பல்வேறு நிறுவனங்களும் ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம் செய்ய தொடங்கியுள்ளன.

இதன்படி, HMD Global நிறுவனம் வெளியிட்டுள்ள நோக்கியா 9 ப்யூர்வியூ ஸ்மார்ட்ஃபோனில் ஒரு புதிய சிக்கல் எழுந்துள்ளது. ஆம். 5 ரியர் கேமிராக்களுடன், இன் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சாருடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்ஃபோனை அன்லாக் செய்யும் முறை பற்றி ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. @decodedpixel என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியிடப்பட்ட இவ்வீடியோவில் காட்டப்படும் காட்சிகள், ஸ்மார்ட்ஃபோன் பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

நோக்கியா 9 டிஸ்பிளேவில் சூயிங்கம் உள்ள பாக்கெட் ஒன்றை வைத்தால் உடனே அது அன்லாக் ஆகிவிடுகிறது. இதுதவிர, ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்தும் நபரை தவிர சம்பந்தமே இல்லாத ஒருவர் கையை வைத்தால் கூட அது அன்லாக் ஆவதாக, வீடியோவில் காட்டப்படுகிறது. ரூ.50 ஆயிரம் விலையில் விற்கப்படும் ஒரு ஃபோன், இப்படி பாதுகாப்பற்ற சாஃப்ட்வேரை பயன்படுத்தலாமா, என வீடியோவை பார்த்த பலரும் நோக்கியாவை விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.