பாஜக ஸ்லீப்பர் செல்! கராத்தே தியாகராஜன் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? பரபரப்பு பிண்ணனி!

காங்கிரஸ் கட்சிக்கும் தி.மு.க.வுக்கும் இடையிலான உறவை எப்படியாவது குலைத்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு இயங்கிவந்தவர் கராத்தே தியாகராஜன்.


இவர்தான் முதன்முதலாக காங்கிரஸ் கட்சி ஆபிஸில் கருணாநிதி படத்தை வைத்து மலர் தூவினார். அதாவது கருணாநிதி பிறந்த நாளை சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடினார். இதனை கண்டிக்கவும் முடியாமல், கண்டிக்காமல் இருக்கவும் முடியாமல் காங்கிரஸ் தலைவர்கள் தயங்கினார்கள். ஒருசிலர் இந்த விஷயத்துக்கு சலசலப்பு கிளப்பவே, அந்த நேரத்தில் உதயநிதி, நாங்குநேரி தொகுதி தி.மு.க.வுக்கு வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

அந்த நேரத்தில் எல்லோரிடமும், ‘நாங்க நாங்குநேரி தர்றோம், அவங்க வேலூர் தொகுதி கொடுப்பாங்களா?’ என்று கிண்டல் செய்தார் கராத்தே. இதையடுத்து காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடத்தில் நிற்கவேண்டும் என்று திரியை கொளுத்திப் போட்டார். இதையடுத்து நேரு திருச்சியில் கண் சிவக்க, கூட்டணி அம்புட்டுத்தான் என்ற நிலை ஏற்பட்டது.
இத்தனை பிரச்னைக்கும் காரணமான கராத்தே தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்று காங்கிரசாரே அதிர்ந்து நின்றனர். ஏனென்றால், அவர் சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளராக கருதப்படுபவர். இந்த நிலையில், தி.மு.க. கூட்டணிதான் முக்கியம் என்பதை காங்கிரஸ் மேலிடம் உறுதியாக நம்புகிறது.

அதனால், இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து தென்சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜனை சஸ்பென்ட் செய்து, கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.ஜி.வேணுகோபால் தெரிவித்து இருக்கிறார். அப்பாடி கராத்தேவை வெளியே அனுப்பியாச்சு, இனிமே தி.மு.க.வுடன் கூட்டணி வைச்சு எப்படியாவது சட்டமன்றத்திலும் ஜெயிச்சுடலாம் என்று காங்கிரஸ் பிரமுகர்கள் பெருமூச்சு விடுகிறார்கள்.