தி.மு.க.வுக்கு குடைச்சல் கொடுக்கும் காங்கிரஸ்... வேப்பனப்பள்ளி அட்டகாசம்.

பெரியண்ணன் மாதிரி கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்த தி.மு.க. அதற்கான விளைவுகளை அனுபவிக்க ஆரம்பித்துள்ளது. ஆம், வேப்பனபள்ளி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்காமல் தி.மு.க. எடுத்துக்கொண்டது.


இதையடுத்து கோபமான வேப்பனப்பள்ளி தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் குப்பச்சிபாறை கிராமத்தில் ஒன்று கூடினர். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க. வினர் உள்ளடி வேலைகள் பார்த்து காங்கிரசை தோற்கடித்தனர். இதுபற்றி தி.மு.க. தலைமைக்கு புகார் செய்தும் கண்டிக்கவில்லை. இதனால் இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்க போவதில்லை’ என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளரை காங்கிரஸ் நிர்வாகிகள் களம் இறக்கியது, தி.மு.க. நிர்வாகிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக அமானுல்லா என்பவரை களம் இறக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

வேப்பனப்பள்ளி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க.- தி.மு.க. வேட்பாளர்களை விட சுயேச்சை வேட்பாளர் அமானுல்லாவின் சொத்து மதிப்பு அதிகமாகும். அதாவது வேட்பு மனுவில் அவர், தனது சொத்துக்கள் 12 கோடியே 66 லட்சத்து 44 ஆயிரத்து 848 ரூபாய் அசையும், அசையா சொத்துகள் என்றும், தனது இரு மனைவிகள் பெயரில் ஒரு கோடியே 83 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் அசையும், அசையா சொத்துகளும் உள்ளன. மேலும் தனக்கு 2 கோடியே 13 லட்சத்து 22 ஆயிரத்து 310 ரூபாய் கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆக, தி.மு.க.வை தோற்கடிக்க காங்கிரஸ் மட்டுமே போதும்.