டாக்டர் எடப்பாடியாருக்கு ஒரு ஓ போடுங்க! பாவம் பன்னீருக்கு கம்பவுன்டர் பட்டமாவது குடுங்களேன் சண்முகம்!

ஆட்சியில் இருப்பவர்களை ஐஸ் வைத்து காரியம் சாதிக்க வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் செய்யும் முதல் முயற்சி என்ன தெரியுமா? டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவிப்பதுதான்.


உண்மையில் உலகம் முழுவதும் ஒவ்வொரு துறையிலும் வல்லவர்களுக்கும், அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நம் தமிழ்நாட்டில் அடுத்து டாக்டர் பட்டம் பெறப்போகிறவர் யார் தெரியுமா?

திருவாளர் எடப்பாடி பழனிசாமிதான். டாக்டர் பட்டம் பெறும் அளவுக்கு எடப்பாடி என்ன சாதனை செய்துவிட்டார் என்று கேட்கிறீர்களா? அட, ஏராளமான காரணங்கள் இருக்கிறதாம்.

குறிப்பாக இப்போது டாக்டர் பட்டம் கொடுப்பதற்கு காரணம் அவர் பொருளாதாரத்தை உயர்த்திவிட்டாராம். அதாவது உலக முதலீட்டார் மாநாடு நடத்தி பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுத்தாராம். வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து ஏராளமான முதலீடுகளுக்கு வழிவகை செய்திருக்கிறாராம்.

அதனால் முதல்வருக்கு பட்டம் வழங்கப்படுகிறது. டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் சார்பில் வரும் 20ம் தேதி அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தலில் சீட் கொடுத்ததற்காக இந்த டாக்டர் பட்டம் கொடுக்கப்படுகிறதா என்று கேட்டுவிடாதீர்கள். இது நியாயப்படியும் தர்மப்படியும் கொடுக்கப்படுகிறதாம். அதுசரி, எடப்பாடிக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கும்போது, துணை முதல்வர் பன்னீருக்கு ஒரு கௌரவ கம்பவுன்டர் பட்டம்கூடவா கொடுக்கக்கூடாது..?