அமிர்தம் எனப்படும் சீம்பால்

குழந்தை பிறந்ததும் சுரக்கும் தாய்ப்பாலை கொலஸ்ட்ரம் எனப்படும் சீம்பால் என்பார்கள். மஞ்சள் நிறத்தில் சுரக்கும் சீம்பாலில் நிறைய நோய் எதிர்ப்பு அணுக்களும், புரதச்சத்துக்களும் நிரம்பியுள்ளன. ஒவ்வாமையில் இருந்து குழந்தையை காப்பாற்றவும், குழந்தை எளிதில் மலம் கழிக்கவும் சீம்பால் உதவுகிறது.


·         சீம்பால் குழந்தையின் வயிற்றுக்கு ஆகாது என்று கிராமப்புறங்களில் நிகழும் கருத்து முற்றிலும் தவறாகும்.

·         சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு அரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரத்திற்குள் சீம்பால் கொடுக்கவேண்டும். சிசேரியன் மூலம் குழந்தை பெற்றவர்கள் மயக்கத்தில் இருந்து விழித்ததும் தாய்ப்பால் கொடுக்கலாம்.

·         முதல் நாள் தாய்ப்பால் மிகவும் குறைந்த அளவே சுரக்கும் என்றாலும் கவலைப்பட தேவையில்லை. குழந்தைக்கு அதுவே போதுமானது.

·         குழந்தை போதுமான அளவுக்கு சீம்பால் குடித்திருக்கிறதா என்பதை, மலத்தின் நிற மாற்றத்தை வைத்து கண்டுபிடிக்க முடியும்.


குழந்தை பிறந்த நாள் தொடங்கி மூன்று முதல் நான்கு நாட்கள் மட்டுமே சீம்பால் சுரக்கும் என்பதால், எந்தக்காரணம் கொண்டும் அமிர்தம் போன்ற சீம்பால் கொடுக்க தயங்காதீர்கள்.