உயிர் பலி கேட்கிறதா கோவை ரயில் நிலையம்? தொழிலார்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்

சென்னை வடபழனியில் மாநகர போக்குவரத்து பணிமனையின் பேருந்து மோதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சோகம் அடங்குவதற்குள் கோவை ரயில் நிலையத்தில் மற்றுமொரு அரசு அலுவலக கட்டிடம் இடிந்துவிழுந்து 2 தொழிலாளர்களின் உயிரை பறித்துள்ளது.


தென்மேற்கு மழை தொடங்கியதை அடுத்து கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கேரள எல்லையான தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் கோவை ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள பார்சல் அலுவலகத்தின் சுற்றுச்சுவர் இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. சுவர் இடிந்து விழுந்த இடிபாடுகளில் ஒப்பந்த தொழிலாளர்களான பவிழமணி, இப்ராஹிம், மற்றும் வடமாநிலத் தொழிலாளி ஒருவர் என 3 சிக்கிக்கொண்டனர்.

உடனடியாக சம்பவம் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கிய 3 தொழிலாளர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் தீவிர சிகிச்சை அளித்தும் தொழிலாளர்கள் பவிழமணி, இப்ராஹிம் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். வடமாநிலத் தொழிலாளிக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர் மழை மற்றும் காற்று காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்திருக்கலாம் என சப்பைக் கட்டு காரணம் கூறினாலும் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் உள்ள பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதியதாக கட்டினால் மட்டுமே இதுபோன்ற அசாம்பாவித சம்பவங்களை தவிர்க்க முடியும் என தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் இதுபோன்று ஒவ்வொரு தொழிலாளர்களும் உயிரிழக்கும் போது அவர்களுடைய குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது என்பதால் தேவையான இழப்பீடை அரசாங்கம் செய்து கொடுத்து அவர்களின் பிள்ளைகளின் படிப்பு செலவை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார்கள் தொழிலாளர்கள்.