115 ரூபா பாக்கிய எப்ப குடுப்பீங்க? சிகிச்சை பலனின்றி இறந்தவரின் மகனுக்கு போன் செய்த பிரைவேட் ஹாஸ்பிடல்!

கோவையில் நோயாளி இறந்த பின்னரும் சிகிச்சை பாக்கி 115 ரூபாய் கேட்டு மருத்துவமனை நிர்வாகம் போன்செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கோவை பீளமேடு பகுதியில் உள்ளது ஒரு தனியார் பிரபல மருத்துவமனை. மிக பிரபலமான மருத்துவமனை என்பதால் கோவை மக்கள் பெரும்பாலும் அங்குதான் சிகிச்சை எடுப்பது வழக்கம் 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேலுச்சாமி என்பவரை அவரது மகன் அந்த பிரபல மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தந்தையை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்ற ஆசையில் மருத்துவமனை நிர்வாகம் கேட்டபோதெல்லாம் தான் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணத்தை கட்டியுள்ளார். கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் வேலுச்சாமி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தந்தைக்கு ஈமச்சடங்கு, காரியம் என துக்க நிகழ்வுகளை முடித்துவிட்டு வீட்டில் இருந்த வேலுச்சாமியின் மகனுக்கு அந்த தனியார் மருத்துவமனையில் இருந்து தொலைபேசி ஒன்று வந்துள்ளது. அதில் உங்கள் தந்தைக்கு சிகிச்சை அளித்ததற்கு பாக்கிக் கட்டணம் 115 ரூபாய் கட்ட வேண்டும் என ஒரு ஊழியர் பேசுகிறார்.

இதனால் வேதனை அடைந்த அவர் "பல லட்சம் ரூபாய் செலவு செய்தும் தன் தந்தையை இழந்துவிட்டேன். தந்தையை இழந்து துக்கத்தில் இருக்கும் தன்னிடம் 115 ரூபாய்க்காக தொலைபேசியில் அழைத்து கேட்கிறீர்களே. இது நியாயமா" என கேட்டுள்ளார். அதற்கு எதிர்தரப்பில் பேசிய நபர் "நானும் ஒரு தொழிலாளி நிர்வாகம் சொல்வதைத்தான் கேட்கவேண்டும்.

நீங்கள் பணம் தராவிட்டால் என்னுடைய சம்பளத்தில்தான் பிடிப்பார்கள். என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள்" என வினவுகிறார். அதற்கு வேலுச்சாமியின் மகன் "உங்கள் நிர்வாகத்தை என்னிடம் பேசச் சொல்லுங்கள் நான் பணம் தருகிறேன்" என்கிறார். இப்படியே வாக்குவாதம் முற்ற ஒரு கட்டத்தில் "என்னால் நீங்கள் பாதிக்க வேண்டாம் உங்கள் சொந்த கணக்கில் நான் பணம் செலுத்திவிடுகிறேன்.

ஆனால் மருத்துவமனைக்கு பணம் கட்ட மாட்டேன்" என்று கூறி போனை கட் செய்கிறார் வேலுச்சாமியின் மகன். பல லட்சம் ரூபாய் பெற்றும் நோயாளி உயிரிழந்த பிறகும் 115 ரூபாய்க்காக தொலைபேசியில் நோயாளி குடும்பத்தாரை கேட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை பீளமேடு பி.எஸ்.ஜி. மருத்துவமனை ஊழியர் பேசுவது போல வெளியான இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.