கொங்கு தமிழச்சியை தமிழர் பாரம்பரியப்படி மனைவியாக்கிய ஜெர்மன் இளைஞர்! கோவை கோலாகலம்!

கோவையில் இளம்பெண் ஒருவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த வாலிபரை காதலித்து தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.


கோவை மாவட்டம் துடியலூர் சுப்பிரமணியன் என்பவரின் மகளான வித்ய பிரபா கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கணிப்பொறியியல் படிப்பை முடித்துவிட்டு ஜெர்மனியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவருடன் பணியாற்றிய ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மைக்கேல் என்பவருடன் நித்திய பிரபாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளதால் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர். முதலில் நண்பர்களாக பழகி இவர்கள் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்த நிலையில் தங்களது காதலை இரு வீட்டார் இடமும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பெற்றோர்களின் ஒப்புதல் படி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

தனது திருமணத்திற்காக ஜெர்மனி நாட்டிலிருந்து மைக்கேல் இந்தியாவுக்கு வந்துள்ளார். அங்கு இந்து திருமண முறைப்படி மைக்கேல் மற்றும் வித்ய பிரபா ஆகிய இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கோவை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

அதில் ஜெர்மனியிலிருந்து மைக்கேல் என்பவரின் பெற்றோர்கள் வரமுடியாத நிலையில் வித்திய பிரபாவின் தாய்மாமன் மற்றும் அத்தை ஆகிய இருவரும் மைக்கேல் வீட்டின் சார்பாக முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் வேறொரு நாட்டைச் சேர்ந்த நபர் தமிழ் பெண்ணை காதலித்து தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.