கோவை சிறுமி உடலில் இன்னொருவனின் டிஎன்ஏ..! கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் பகீர் திருப்பம்..!

கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கில் மேலும் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாகக் கூறி சிறுமியின் தாய் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.


துடியலூரை அடுத்த பன்னீர்மடை பகுதியை சேர்ந்த 1ம் வகுப்பு மாணவி கடந்த மார்ச் 25ம் தேதி திடீரென காணாமல் போனார். சில மணிநேரத்தில் வீட்டின் எதிரே கை, கால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டார். சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து யாரோ கொன்றிருக்கலாம் என்று, பிரேத பரிசோதனையில் தெளிவானது. இச்சம்பவம் பற்றி துடியலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். ஏராளமானோரை விசாரித்த நிலையில், இறுதியாக சந்தோஷ்குமார் என்பவரை கடந்த மார்ச் 31ம் தேதி போலீசார் கைது செய்தனர்.  

இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதி தீர்ப்பு தற்போது வெளியாக உள்ளது. 6 வயது சிறுமியை வன்புணர்ந்து கொன்ற கயவனுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.  

இந்நிலையில், வழக்கில் புதிய திருப்பமாக, சிறுமியை வன்புணர்வு செய்ததில் மேலும் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாகக் கூறி, அவரது தாய் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். குழந்தையின் உடலை பரிசோதனை செய்ததில், சந்தோஷ் மட்டுமின்றி மேலும் ஒருவரின் டிஎன்ஏவும் படிந்துள்ளதாக, தெரியவந்தது. அதனை வழக்கறிஞர் தெரிவித்ததன் பேரில், சிறுமியின் தாய் தற்போது நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். அந்த நபரையும் கண்டறிந்து போலீசார் உரிய தண்டனை பெற்று தர வேண்டும் என, சிறுமியின் தாய் வனிதா வலியுறுத்தியுள்ளார்.