சென்னை அண்ணா மேம்பாலத்தை ஒட்டி இருக்கும் செம்மொழி பூங்காவுக்கு எப்போதாவது போயிருக்கிறீர்களா.
சினிமாகாரர்களின் சொர்க்கம்! ட்ரைவ் இன் உட்லேண்ட்ஸ்! ஒரு இனிய ஃப்ளாஷ்பேக்!

பத்துவருடம் முன்பு வரை அதுதான் தமிழ் சினிமாவின் இதயம்.1962 ல் அங்கே உருவான உண்லேண்ட்ஸ் டிரைவின் ஹோட்டலுக்கு பல சினிமாம்காரர்கள் ரசிகர்களாக இருந்தனர்.இத்தனை மால்களும் காப்பி ஷாப்களும் இல்லாத சென்னை அது.1960 முதல் 2000ம் வரைச் சென்னையின் அடையாளங்கள் மூன்றுதான்.
முதலாவது இரண்டு ரூபாய் சுண்டலோடு சிக்கனமாக பொழுதைப் போக்க மெரீனா பீச்.அடுத்தது வசதியான மக்களுக்காக ஸ்பென்ஸர் வளாகம்.இரண்டுக்கும் இடைப்பட்டது நடுத்தர மக்களுக்கான டிரைவ்- இன் உட்லேண்ட்ஸ். பெயர்தான் டிரைவ் இன் நீங்கள் நடந்துகூடப் போகலாம்.18 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மரங்களடர்ந்த பெரிய பூங்காவைப் போல இருக்கும்.
கார்கள்,பைக்குகள் என்று வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும் எப்போதும்.அன்றைய பிரபல எழுதாளர்களான சுஜாதாவின் கனேஷ் வசந்த்,முதல் சிவசங்கரி , ராஜேந்திரகுமார்,இந்துமதி,வாசந்தி கதாபாத்திரங்கள் அங்கேதான் வந்து காஃபி குடிப்பார்கள்.நிஜத்திலும் அப்படித்தான்,தமிழ்,தெலுங்கு, மலையாள் சினிமாக்காரர்கள் ஏதாவது ஒரு மரத்தடியில் காரைப் போட்டு விட்டு கதை கேட்பார்கள்.
இயக்குநர்கள் ஏராளமாக வந்து கனவுகளோடு தயாரிப்பாளருக்காகவோ நடிகருக்காகவோ காப்பி குடித்தபடி காத்திருப்பார்கள்.அங்கே கிடைக்கும் ரவாதோசை,போண்டா,காஃபி அந்தக் காலத்தில் மிகவும் பிரபலம்.ஷூட்டிங் இல்லாத நாட்களில் ,ஜீன்ஸ் பேண்ட் டி ஷர்ட் அணிந்து தனது டாட்டா சியராகாரில் கவுண்டமணி அங்கே ஆஜராகி விடுவார்.
அடுத்த பிரபலம் பி.பி ஸ்ரீனிவாஸ்! எம்ஜிஆர் பாணியில் தொப்பி அணிந்து சட்டைப் பாக்கெட்டில் நான்கைந்து பேனாக்களுடன் செல்ஃப் சர்வீஸ் பகுதி மேஜையில் அமர்ந்து கவிதை எழுதிக்கொண்டு இருப்பார்.இது தவிர டீசெண்ட் காதல் ஜோடிகள்,மதிய வெய்யிலுக்கு ஒதுங்கும் மெடிக்கல் ரெப்கள்.
கல்லூரிக்கு கட்டடித்த இளைஞர்கள்.பக்கத்தில் இருக்கும் சஃபையர் தியேட்டரில் படம் பார்க்க வந்தவர்கள் என்று விதவிதமான மனிதர்களைப் பார்க்கலாம்.எல்லாம் 2008 ஏப்ரலோடு முடிந்து விட்டது.இப்போது அங்கே இருக்கும் செம்மொழி பூங்காவும் பராமரிப்பு இல்லாமல் பரிதாபமாக இருக்கிறது.