வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு! இந்தியாவை வீழ்த்தியது சீனா!

டெல்லி: மார்ச் காலாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று, தகவல் வெளியாகியுள்ளது.


ஜிடிபி எனப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சி, கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் 5.8 சதவீதமாக உள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், போட்டி நாடான சீனாவின் பொருளாதார வளர்ச்சி இதே காலத்தில் 6.4 சதவீதமாக உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில், முதல்முறையாக வேகமாக வளர்ந்து வரும் நாடு என்ற அந்தஸ்தை, சீனாவிடம் இந்தியா இழந்துள்ளது. 

கடந்த 2018-19 முழு நிதியாண்டில், இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம், இது எதிர்பார்க்கப்பட்ட அளவான 7 சதவீதத்தை விட குறைவாகும். நாட்டில் பொருளாதார மந்தநிலை உள்ளதாக, நிதித்துறை செயலர் சுபாஷ் சந்திரா கார்க் கூறியுள்ளார். பொருளாதார மந்தநிலை காரணமாக, வரும் ஜூன் மாதத்தில் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்ய உள்ள நிதிக்கொள்கை அறிவிப்பில், வட்டிவிகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.

2019-2020 நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என, ரிசர்வ் வங்கி ஏற்கனவே மதிப்பீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.