போலீஸ் யூனிபார்மில் சிதம்பரத்தை கலக்கிய சூரிய பிரபா..! தகாத செயலில் ஈடுபட்டதால் சிக்கிய பின்னணி!

கடலூரில் காவல்துறை உடையுடன் உலாவந்த போலி உதவி ஆய்வாளர், கணவர், நண்பர் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சூர்யா பிரபா என்ற பெண், போலீஸ் உடை அணிந்துகொண்டு தன்னை ஒரு காவல் உதவி ஆய்வாளர் என பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியுள்ளார். பேருந்தில் ஓசி பயணம் மேற்கொள்வது, கிராம நிர்வாக அலுவலர்களை மிரட்டி பணம் பறிப்பது என பல்வேறு குற்றங்களை செய்து வந்துள்ளார். 

இந்நிலையில் இவரது நண்பரான சக்கரபாணி என்பவர் குடித்து விட்டு இருசக்கர வாகனம் ஓட்டியபோது சிதம்பரம் காவல்நிலைய போலீசாரின் வாகன தணிக்கையில் சிக்கினார். இதையடுத்து அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்நிலையம் அழைத்து வரப்பட்டார். இதுகுறித்து கேள்விபட்ட சூர்ய பிரபா நேராக சிதம்பரம் காவல்நிலையம் சென்று, தான் கடலூர் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் என்றும் சக்கரபாணியை விடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவரை சிதம்பரம் டிஎஸ்பியிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் அங்கு நடத்தப்பட்ட முறையான விசாரணையில் சூர்யபிரபா ஒரு போலி சப் இன்ஸ்பெக்டர் என தெரியவந்துள்ளது. மேலும் அவர் சிதம்பரத்தை சேர்ந்த ராஜதுரை என்பவரின் மனைவி என்பதும் தெரியவந்தது.

இவர் போலீஸ் அதிகாரி போல் நடிக்க அவரது கணவரும் உடந்தை என தெரியவந்ததை அடுத்து சூர்யபிரபா, கணவர் ராஜதுரை, குடிபோதையில் வாகனம் ஓட்டிய சக்கரபாணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவரை காவலில் எடுத்து விசாரித்தால் யார் யாரை ஏமாற்றினார் என தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.