விசாரணைக்கு வரனும்! போனில் மிரட்டிய போலீஸ்! ரயில் முன் பாய்ந்த இளைஞன்! சென்னை திகுதிகு!

சென்னையில் காவல்துறையினர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்ததால் அச்சத்தில் இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை மாதவரம் பொன்னியம்மன்மேடு பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட நிலையில் வெங்கடேசன் ரமேஷ் மீது காவல்துறையில் தன்னை கொலை செய்ய முயற்சி செய்வதாக புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து சென்னை மாதவரம் காவல்துறையினர் ரமேஷ் என்பவரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வரும்படி செல்போனில் தொடர்புகொண்டு அழைத்துள்ளனர். இதனால் பயந்த ரமேஷ் காவல் நிலையத்திற்கு சென்றால் தன்னை கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள் என அஞ்சி தனது நண்பர்களிடம் தற்கொலை செய்துகொள்ள போவதாக தெரிவித்துவிட்டு வில்லிவாக்கம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மற்றும் இது தொடர்பாக ஒரு ஆடியோ பதிவையும் ரமேஷ் வெளியிட்டுள்ளார்.இந்நிலையில் தற்கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து ரமேஷின் உறவினர்கள் வெங்கடேசனை கைது செய்யுமாறு காவல் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறை அதிகாரிகள் வெங்கடேசன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய பின்னரே அங்கிருந்து கூட்டம் கலைந்து சென்றது.