சென்னை டூ திருச்சி! நள்ளிரவு! திடீரென பற்றி எரிந்த தீ! பேருந்தில் இருந்த 42 பேரின் கதி?

நேற்று இரவு சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி நோக்கி தனியாருக்கு சொந்தமான ஆம்னிப் பேருந்து 42 பயணிகளுடன் புறப்பட்டது.


பேருந்தை இரண்டு ஓட்டுநர்கள் மாற்றி மாற்றி ஓட்டிச் சென்ற நிலையில் திருச்சி அருகே கொணல் என்ற இடத்தில் பேருந்து கடந்தபோது பேருந்தில் திடீரென கருகும் வாசனையை பயணிகள் உணர்ந்தனர். உடனடியாக சுதாரித்த பயணிகள் பேருந்தின் மேற்கூரையில் தீப்பிடித்ததை கண்டுபிடித்து தீ தீ என அலறினர்.

இதையடுத்து பேருந்து ஓட்டுநர் அவசர அவசரமாக சாலையோரத்தில் பாதுகாப்பான இடத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு பயணிகளை கீழே இறங்குமாறு கூச்சலிட்டார். மேற்கூரையில் பிடித்த தீ படிப்படியாக பேருந்துக்குள்ளும் பரவியதில் உறக்கத்தில் இருந்த மற்ற பயணிகளும் அலறியடித்து எழுந்து அவசர அவசரமாக இறங்கினர்.

அவர்கள் பேருந்தை விட்டு இறங்க ஓட்டுநர்களும் உதவி செய்தனர். சிலர் பயத்தில் பேருந்தின் பின்பக்கமாக சென்று கண்ணாடியை உடைத்துக்கொண்டு இறங்கியதில் 2 பேருக்கு சிராய்வு ஏற்பட்டு காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வாகனத்தில் சென்ற வீரர்கள் தீயை அணைக்க போராடினர்.

எனினும் தீயணைப்புத்துறையினர் தீயை அணைப்பதற்குள் பேருந்து முழுவதும் எரிந்துவிட்டது. இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பேருந்தில் மேற்கூரையில் இருந்த ஏசியின் ஒயரில் மின்கசிவி ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக ஓட்டுநர் தெரிவித்தபோதும் தீ விபத்துக்கு வேறு எதுவும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.