தெரியாம திருடிட்டேன்..! களவாடிய பைக்கை அதே இடத்தில் பார்க் செய்துவிட்டு திருடன் செய்த செயல்! விறுவிறு சிசிடிவி!

சென்னை: திருடிய இடத்திலேயே பைக்கை மீண்டும் பார்க் செய்த நபர் தொடர்பான வீடியோ டிரெண்டிங் ஆகியுள்ளது.


சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஜெயச்சந்திரன் நகரில் நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இவர் இரவு தோறும் 11 மணியளவில் நடனப் பள்ளியை மூடிவிட்டு வீடு திரும்புவது வழக்கம்.

இதன்படி, நடனப் பள்ளியின் வெளியே நிறுத்தியிருந்த அவரது பைக்கை, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதுபற்றி கார்த்திக் போலீசில் புகார் செய்தார். ஆனால், அடுத்த 2 நாட்களில் ஒரு வியப்பான சம்பவம் நிகழ்ந்தது. ஆம், குறிப்பிட்ட இடத்தில் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டுள்ளதை தெரிந்துகொண்ட பைக் திருடன் சத்தம் போடாமல் அதே இடத்தில் மீண்டும் பைக்கை கொண்டு வந்து நிறுத்திவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டான்.

இதன்பேரில், பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிந்து, சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட திருடனை தேடிவருகின்றனர். இதற்கிடையே, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.