சிசிடிவி காட்சி இருக்கு! மெரீனாவை குப்பை மேடாக்கிய மாணவர்களை கதறவிட்ட நேர்மை போலீஸ்!

சென்னை பெசண்ட் நகர் கடற்கரயில் பிறந்த நாள் கொண்டாடி குப்பையாக்கிய இளைஞர்களை கண்டுபிடித்து சுத்தப்படுத்தச் செய்த காவலர் பாராட்டு பெற்றுள்ளார்.


சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் பணியாற்றுபவர் எபின் கிறிஸ்டோபர். கடந்த 29-ஆம் தேதி இவர் பெசன்ட் நகர்  எலியர்ட்ஸ் கடற்கரையில் பணியில் இருந்த போது ஒரு இடத்தில் அளவுக்கதிகமாக குப்பைகள் சிதறிக் கிடந்ததைக் கண்டு வேதனையடைந்தார். குப்பையில் கிடந்தவை கேக் வைக்கும் அட்டைப்பெட்டிகள் என தெரியவந்தது 

விசாரணையில், சாஸ்திரி நகரில் உள்ள பேக்கரியில் கேக்குகள் வாங்கியது தெரியவந்தது. அந்தக் கடையில் அந்த நாளில் கேக் வாங்கியவர்களின் செல்ஃபோன் எண்களைப் பெற்றார். மேலும் சி.சி.டி.வி. கேமரா மூலம் பிறந்தநாள் கொண்டாடியவர்களை அடையாளம் கண்ட அவர், செல்போன் மூலம் அவர்களைத் தொடர்பு கொண்டார். 

எதிர்முனையில் பேசியவர்கள், தங்களுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை' என்று மறுத்த நிலையில் தன்னிடம் சி.சி.டி.வி. பதிவுகள் இருப்பதாகக் கூறி கடற்கரைக்கு வரவழைத்தார். அவர்களிடம் பேசிய அவர் சுத்தத்தை பேண வேண்டியதன் அவசியத்தை அறிவுறுத்தினார். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய மாணவர்களே இப்படிச்  செய்யலாமா என அவர் நயமுடன் கேள்வி எழுப்பியதையடுத்து அவர்கள் தர்மசங்கடமாக உணர்ந்தனர். 

இதையடுத்து, காவலரின் அறிவுரைப்படி அந்த இடத்தை அவர்கள் சுத்தம் செய்தனர். இந்தச் சம்பவம் காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு சென்ற நிலையில் அவர்கள் அவரை அழைத்துப் பாராட்டினர். இதனை முன்னுதாரணமாகக் கொண்டு ஒவ்வொரு காவலரும் சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.