துப்பட்டா இல்லா சுடிதார் பெண்கள் மட்டும் தான் குறி! சென்னையை கலக்கும் டூவீலர் சைக்கோக்கள்!

குற்றப் புலனாய்வுக்கு சி.சி.டி.வி. கேமராக்களின் பங்கு அவசியம் எனக் கூறி சென்னை முழுவதும் போலீசார் சி.சி.டி.வி. காமிராக்களை அமைத்து வரும் நிலையில் அதனை பொருட்டாகக் கருதாமல் வழிபறிக்கொள்ளையர்கள் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகின்றனர்.


சிந்தாரிப்பேட்டையில் ஒரே நாளில் மூன்று பெண்களின் செல்போன்களை இரு சக்கரவாகனத்தில் வந்த இருவர் பறித்து சென்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீஸார், தனிப்படை அமைத்து தீவிர  விசாரணை மேற்கொண்டனர். 

வழிப்பறி சம்பவங்கள் நடந்த இடங்களில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு  செய்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போனை பறித்து செல்லும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியிருந்தது தெரியவந்தது. அதில் அவர்களின் முகங்களும் தெளிவாக பதிவாகியிருந்தன.

அதனைக் கொண்டு ஆவடியைச் சேர்ந்த சுந்தர்ராஜ், வியாசர்பாடியைச் சேர்ந்த அஜித் என்ற இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் இருசக்கரவாகனத்தைக் கைப்பற்றியதோடு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் தொடர்ந்து பெண்களிடம் மட்டுமே செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதோடு மட்டும் அல்லாமல் சுடிதாருடன் வரும் பெண்களைமட்டுமே குறி வைத்து செல்போன், நகைகளை பறித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். புடவை அணிந்திருக்கும் பெண்களிடம் நகைகளை பறிப்பதில் சிக்கல் இருப்பதாகவும், ஆனால் துப்பட்டா இல்லாமல் வெறும் சுடிதாருடன் வரும் பெண்களிடம் இருந்து எளிதாக நகைகளை பறிக்க முடிவதாக கூறி அதிர வைத்துள்ளனர்.