அது உங்க 100 ரூபாயா? ஆசையாக சென்ற முதியவர்! ரூ.1 லட்சத்தை தட்டி தூக்கிய ஹெல்மெட் கொள்ளையர்கள்! மாதவரம் சம்பவம்!

சென்னை புழலில் முதியவர் ஒருவரை நூதன முறையில் ஏமாற்றிய கொள்ளையர்கள் இருவர் அவர் மோட்டார் பைக்கில் வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதை அடுத்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.


சென்னை மாதவரம் அடுத்த புழலை சேர்ந்த முதியவர் சீனிவாசன் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இந் நிலையில் அவர் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து அவருக்கு சேர வேண்டிய பணப் பலன்கள் மற்றும் பணிக் கொடை ஆகியன அவரது வங்கிக் கணக்கில் சில மாதங்களுக்கு முன்னர் வரவு வைக்கப்பட்டு உள்ளது.

இதை அடுத்து தனது குடும்ப செலவுகளுக்காக புழல் கேம்ப் அருகிலுள்ள இந்தியன் வங்கி கிளைக்கு சென்ற சீனிவாசன் அவரது சேமிப்பு கணக்கிலிருந்து ரூபாய் ஒரு லட்சம் எடுத்துக் கொண்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றார். பணத்தை இரு சக்கர வாகனத்தின் முன் பகுதியில் பெட்ரோல் டேங்க் மேலே உள்ள கவரில் வைத்துக் கொண்டார்.

பின்னர் வங்கியில் இருந்து புறப்பட்டு வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். இதை பார்த்த 2 பேர் தலைக்கவசம் அணிந்தபடி இருசக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்தனர். புழல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய தேவாலயம் அருகே சீனிவாசன் சென்று கொண்டு இருந்த போது அவரை நெருங்கியபடி இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் உங்களுடைய சட்டையில் இருந்து 100 ரூபாய் பறந்து சாலையில் விழுந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதை நம்பிய சீனிவாசன் தன்னுடைய வாகனத்தில் ஒரு லட்ச ரூபாய் வைத்திருப்பதை மறந்து விட்டு சாலையில் பணம் விழுந்து விட்டதாக நம்பி அதை எடுக்க சென்றார். 20 வினாடிகள் மட்டுமே இருந்த நேரத்தை பயன்படுத்திய கொள்ளையர்கள் அவர் வண்டியில் இருந்த ஒரு லட்சம் ரூபாயுடன் தப்பி ஓடினர். 

சாலையில் பணம் எதுவும் இல்லாமல் திரும்பி வந்த சீனிவாசனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் குடும்பச் செலவுக்காக வங்கியில் இருந்து எடுத்து வந்த பணத்தை காணவில்லை. பின்னர் தன்னுடைய கவனத்தை திசை திருப்பி கொள்ளையர்கள் பணத்தை திருடிச் சென்றதை உணர்ந்த சீனிவாசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.