சாலையில் கட்டு கட்டாக பணம்! கண்டு எடுத்து நேராக போலீஸ் ஸ்டேசன் சென்ற நேர்மை இளைஞர்கள்! நெகிழ்ச்சி சம்பவம்!

சாலையில் ஒரு ரூபாய் கிடந்தால் கூட யாருடையது என விசாரிக்காமல் எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு செலவு செய்வது ஒரு காலம். ஆனால் தற்போது இளைஞர்களின் மனநிலை மாறியுள்ளது.


சென்னையில் சாலையில் கேட்பாரற்று கிடந்த 3 லட்சம் ரூபாய் பிரித்து கூட பார்க்காமல் போலீசாரிடம் 2 இளைஞர்கள் ஒப்படைத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் 24 மணிநேரமும் பரபரப்பாக இருப்பது கிரிம்ஸ் சாலை. காரணம் அங்கு இருக்கும் அப்போலோ மருத்துவமனை. எந்நேரமும் நோயாளிகளும், ஆம்புலன்சுகளும் பரபரப்பாக வந்து செல்லும் சாலை அது.

கிரீம்ஸ் சாலை முருகேசன் நாயக்கர் வணிக வளாகம் அருகே நேற்று மாலை கேட்பாரற்று ஒரு பார்சல் கிடந்தது. அதில் என்ன இருக்கிறது என அந்த வழியே வந்த தனியார் நிறுவன ஊழியர்கள் அபினாஷ், சதாம்உசேன் அந்த பார்சலை எடுத்து பார்த்தனர். அதில் பணம் இருப்பதை உணர்ந்த அவர்கள் தாமதிக்காமல் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பார்சலை பிரித்துக் கூட பார்க்காமல் காவல்நிலையத்தில் ஒப்படைத்த அந்த இரண்டு இளைஞர்களையும் காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டியதோடு மட்டுமல்லாமல் கௌரவிக்கவும் உள்ளனர். மேலும் கீழே பணத்தை தவறவிட்டு சென்றவர்கள் இதுவரை புகார் அளிக்கவில்லை.

எனவே பணம் சட்டவிரோதமாக எடுத்து வரப்பட்டதா? திருடிக் கொண்டு வந்த பணத்தை பயத்தில் போட்டு விட்டு சென்றார்களா என போலீஸ் விசாரிக்கிறது. பணம் யார் போட்டார்கள் என்பதை அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.