பூ போட்ட டாப்ஸ்! பிங்க் பேண்ட்! சென்னை ஏரியில் சுடிதாருடன் சிக்கிய சடலம் பெண் அல்ல..! போலீஸ் விசாரணையில் அம்பலமான திடுக் உண்மை!

சென்னையில் ஏரி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டது பெண் அல்ல என்பது உடற்கூறு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து திருநங்கைகளிடம் போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர்


கடந்த 21ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கம் ஏரியில் கை, கால்கள் நைலான் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் இளம் பெண்ணின் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடலை மீட்டனர். சுமார் 25 வயதுடைய அந்த பெண்ணின் உடல் அழுகிய நிலையில் ஏரியில் மிதந்ததால், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலிசார் விசாரித்து வந்தனர்.

அவரது மூக்குத்தி, உடை ஆகியவற்றை வைத்து, கொலையான பெண் ஆந்திராவை சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வந்தனர். அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரச மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால் பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் அவரது உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை வெளியானது. அதில் இறந்த நபருக்கு கர்ப்பப்பை இல்லை என்பதும் இறந்தது பெண்இல்லை என்றும், திருநங்கையாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.  

இதனை அடுத்து 50 திருநங்கைகளிடம் அவரின் புகைப்படத்தை காண்பித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். உடல் கண்டெடுக்கப்பட்டு மூன்று நாட்களாகியும் யாரென கண்டுபிடிக்க முடியாத நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.