பூ போட்ட டாப்ஸ்..! வெளிர் சிவப்பு நிற பேண்ட்..! சென்னை ஏரியில் சுடிதாருடன் சடலமாக மிதந்த இளம் பெண்!

காஞ்சிபுரம் மாவட்டம் சிறுசேரியை அடுத்த பெரும்பாக்கம் ஏரியில் சுமார் 25 மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.


பெரும்பாக்கம் ஏரியில் கை, கால்கள் நைலான் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் இளம் பெண்ணின் சடலம் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் ஏரியில் தலை குப்புற மிதந்த உடலை தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டனர்.

சுமார் 25 வயதுடைய அந்த பெண் நீலம் மற்றும் பிங்க் கலரில் மல்சட்டையும், பிங்க் கலரில் சுடிதார் பேண்ட், மூக்குத்தி அணிந்திருந்தார். பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்தாலும், அவர் அணிந்திருந்த உடை புதிதாக இருந்ததாக போலீசார் சொல்கிறார்கள். கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஏரியில் மிதந்ததால், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலிசார் விசாரித்து வருகின்றனர்.

நைலான் கயிற்றினால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு பிறகு அதே கயிற்றினால் உடலை கட்டி ஏரியில் வீசியிருக்கலாம் எனவும், கொலை நடந்து 2 நாட்கள் இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர். அவரது மூக்குத்தி, உடை ஆகியவற்றை வைத்து, கொலையான பெண் ஆந்திராவை சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.

ஒருவேளை அங்குள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தவராக இருக்கலாம் என்றும், அதே சமயம் கடந்த 2 நாட்களில் பெண் யாரேனும் காணாமல் போய் உள்ளார்களா எனவும் போலீஸ் விசாரித்து வருகிறது. மேலும் இந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவை கொண்டு கொலையாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தனிப்படையுடன் இறங்கி உள்ளனர்.