சென்னையில் கேஸ் அடுப்பில் எரிவாயு கசிந்து வீடு முழுக்க பரவியதால் அழுத்தம் தாங்க முடியாமல் கதவுகள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.
திடீரென வெடித்துச் சிதறிய 3 கதவுகள்! வீட்டை பூட்டிவிட்டு டிவி பார்த்த குடும்பத்திற்கு விபரீத அனுபவம்! அதிர்ச்சி காரணம்!
சென்னை கிண்டியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டு குடும்பத்தாருடன் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தார். குளிர்சாதனை வசதி உள்ள வீடு என்பதால் அனைத்து அறைகளின் கதவுகளும் மூடப்பட்டு இருந்தது.
இந் நிலையில் மாரிமுத்து வீட்டின் முன்பக்க வாசல் கதவு, படுக்கை அறை கதவு மற்றும் சமையல் அறை கதவுகள் வெடித்து சிதறின. இதை பார்த்ததும், மாரிமுத்து, மருமகள், பேரன் ஆகியோர் அலறியடித்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்து ஆறுதல் கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கிண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நல்வாய்ப்பாக கதவு மட்டுமே வெடித்து சிதறியது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. திடீரென கதவுகள் வெடித்து சிதறியதற்கான காரணத்தை தடயவியல் துறையினர் ஆய்வு செய்தனர்.
வெந்நீருக்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்து அதில் 20 நிமிடங்களுக்கு மேலாக தண்ணீர் கொதித்து கொண்டே இருந்துள்ளது. பின்னர் தண்ணீர் பொங்கி பாத்திரத்தில் இருந்து வெளியே வந்து கேஸ் அடுப்பு அணைந்துவிட்டது. பின்னர் கேஸ் அடுப்பில் இருந்து வெளியேறிய எரிவாயு சமையல் அறை முழுவதும் பரவியது.
படுக்கை அறை, வாசல் கதவுகள் மற்றும் ஜன்னல் கதவுகள் அனைத்தும் காற்று வெளியே செல்ல முடியாத அளவுக்கு மூடி இருந்ததால் எரிவாயு வெளியேற முடியாமல், வெந்நீரால் ஏற்பட்ட நீராவியுடன் கலந்து அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கதவுகள் வெடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.