சென்னையில் பேய் மழை! காரணம் ரெட் தக்காளிஸ்! தமிழ்நாடு வெதர்மேன் கூறும் அப்டேட்!

சென்னையில் மாலை நேரத்தில் பெய்த பேய் மழையால் சென்னைவாசிகள் உச்சி குளிர்ந்து போயுள்ளனர்.


சுமார் ஆறு மாதங்களுக்கு பிறகு இந்த மாத தொடக்கத்தில் தான் சென்னை மழையை பார்த்தது. ஒரே ஒரு நாள் பெய்த மழை மூலமாக சென்னையில் தண்ணீர் பிரச்சனை ஓரளவு குறைந்தது. ஆனால் அதன் பிறகு மழைக்கான எந்த வாய்ப்பும் தென்படாமல் இருந்தது.

இந்த நிலையில் இன்று மாலை 7 மணிக்கு பிறகு திடீரென சென்னையில் கருமேகங்கள் சூழ்ந்தன. அத்துடன் மழை பேய் போல் பெய்யத் தொடங்கியது. பலத்த காற்றுடன் மழை ஒரு காட்டு காட்ட சென்னைவாசிகள் அரண்டே போய்விட்டனர்.

புயலின் போது பெய்யும் மழை போல் அவ்வளவு வேகமாக மழை பெய்தது. இதனால் சென்னை சாலைகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றதை காண முடிந்தது. ஆனால் தண்ணீர் பிரச்சனை தீரும் என்பதால் இந்த மழையை சென்னை வாசிகள் கொண்டாடித் தீர்க்கின்றனர்.

இதனிடையே சென்னையில் திடீர் மழைக்கு காரணம் என்ன என்று அறிய தமிழ்நாடு வெதர்மேன் பேஸ்புக் பக்கம் சென்ற போது, சென்னையில் ரெட் தக்காளிஸ் தென்படுபவதாகவும் இதனால் மழை பெய்வதாகவும் கூறியிருந்தார். அதாவது வெப்பச் சலனம் காரணமாக இந்த மழை பெய்துள்ளதாக அவர் காமெடியாக கூறியுள்ளார். 

தொடர்ந்து 2 நாட்களுக்கு சென்னையில் இதே போல்மழை இருக்கும் என்றும் வெதர்மேன் கூறியுள்ளார்.அப்போது சென்னை மக்களுக்கு இன்னும் ரெண்டு நாட்கள் ஒரே ஜாலி தான்.