சென்னையில் என்கவுண்டர்! பிரபல ரவுடி சுட்டு வீழ்த்தப்பட்டான்! அதிர வைக்கும் காரணம்!

சென்னையில் அதிகாலையில் நடந்த என்கவுண்டரில் பிரபல ரவுடி சுட்டுக் கொல்லப்பட்டான்.


சென்னை புளியந்தோப்பு காவல்நிலைய காவலர்கள் ரமேஷ் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் அங்குள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பிற்கு வழக்கு விசாரணை ஒன்றுக்காக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த பிரபல ரவுடி வல்லரசு என்பவன் போலீசாரிடம் தகராறு செய்துள்ளான்.

இதனால் அவனை கைது செய்ய போலீசார் இருவரும் முயன்றுள்ளனர். அப்போது வல்லரசு தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் போலீசார் இருவரையும் வெட்ட முயன்றுள்ளான். அதிஷ்டவசமாக ரமேஷ் தப்பித்துக் கொள்ள, பவுன்ராஜூக்கு வெட்டு பலமாக விழுந்தது.

இதனை அடுத்து அங்கு விரைந்த சக போலீசார் ரவுடியால் வெட்டு பட்ட காவலர்  பவுன்ராஜை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த வியாசர்பாடி மற்றும் எம்கேபி நகர் போலீசார் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்கு சென்றனர்.

போலீசை வெட்டிய ரவுடி வல்லரசுவை அவர்கள் தேடி வந்தனர். அப்போது அங்கு பட்டா கத்தியுடன் வல்லரசு வந்ததாகவும் போலீசார் அவனை எச்சரித்த போது மீண்டும் தாக்க முயன்றதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது போலீசார் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே வல்லரசு உயிரிழந்தான்.

சென்னையில் அதிகாரை நடந்த என்கவுண்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் போலீசார் வல்லரசுவை கைது செய்து அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றுவிட்டதாக அவனது உறவினர்கள் கூறி வருகின்றனர்.