சென்னை விம்கோ நகர் ஜெயகோபால் கரோடியா பள்ளி மாணவி சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆண் நண்பனுடன் டூ வீலரில் பயணம்! 11ம் வகுப்பு மாணவிக்கு ஏற்பட்ட பரிதாபம்!
திருவொற்றியூரை சேர்நத் குப்பன் என்பவரின் மகள் கோமதி பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அருகில் உள்ள விம்கோ நகரில் உள்ள பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் செல்வது வழக்கம். வழக்கம்போல அவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் தினேஷ் என்பவருடன் நேற்று பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
இவர்கள் திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் சென்ற போது கே.வி. குப்பம் என்ற பகுதியில் அந்த வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவர்கள் மீது மோதியது. இதையடுத்து இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இந்த விபத்தில் கோமதிக்கு தலையில் பலத்த காயம் அடைந்தது.
உடனடியாக அவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி கோமதி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து தண்டையார்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தினேஷ் மீது இருசக்கர வாகனத்தை மோதிவிட்டு தப்பிச் சென்ற நபர் குறித்தும் விசாரித்து வருகின்றனர். சாலை விதிகளை துச்சமென மதிக்கும் இளைஞர்கள் வாகனம் ஓட்டும்வரை இழப்புகளுக்கு என்றென்றும் பஞ்சமில்லை என்பதே வேதனையான கருத்து.
விதிமீறல்களுக்கு போலீசார் 10 மடங்கு அபராதம் விதிக்கும்போது பொங்கி எழும் மக்கள் சாலை விதிகளை கடைப்பிடித்தாலே கோமதி போன்ற குழந்தைகளை நாம் இழக்காமல் இருக்கலாம்.