பயங்கர சப்தம்! வானை முட்ட எழுந்த கரும்புகை! குலுங்கிய தொழிற்சாலை! 13 பேர் பலியான பயங்கரம்!

மஹாராஷ்டிரா மாநிலம் தூலே மாவட்டத்தில் அருகே ரசாயன ஆலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் தொழிலாளர்கள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


மஹாராஷ்டிரா மாநிலம் தூலே மாவட்டம் ஷிர்பூர் தாலுகாவுக்கு உட்பட்டது வகாதி எனும் கிராமம். இங்க வேதிப்பொருள்களை கையாளும் ரசாயன ஆலை ஒன்று இயங்கி வருகிறது. வழக்கம் போல் இன்று காலை தொழிற்சாலைக்கு சென்ற நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் தங்கள் பணிகளை செய்து வந்தனர். 

இந் நிலையில் ஆலையில் ஒரு பகுதியில் இருந்த ரசாயன பொருட்கள் திடீரென வெடிக்கத் தொடங்கியது. உடனடியாக அதை அணைப்பதற்கு மற்ற தொழிலாளர்கள் தீயணைப்பு கருவியை பயன்படுத்தத் தொடங்கினர். ஆனால் படிப்படியாக தீ வேகமாக பரவ ஆலை முழுவதும் புகை சூழ்ந்து கொண்டது.

தகவல் அறிந்து 5 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். மேலும் பேரிடர் மீட்புக் குழுவும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட உடன் சில தொழிலாளர்கள் உடனடியாக ஆலையை விட்டு வெளியில் வந்து விட்டனர். அதே சமயம் புகை மூட்டத்தால் எப்படி வெளியில் செல்வது என தெரியாமல் 13 தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். மற்றொரு பகுதியில் 70 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது.

அவர்களை காப்பாற்றும் முயற்சியில் தீயணைப்புத் துறையினரும் உள்ளூர் மாவட்ட நிர்வாகத்தினரும் இணைந்துள்ளனர். தப்பித்தால் போதும் என தீக் காயங்களுடன் வெளியில் வந்த 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ரசாயன பொருட்களை பொறுத்தவரை சிறிய அளவில் உராய்வு ஏற்பட்டாலே எளிதில் தீ பிடிக்கக் கூடியது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஆலையில் தொடர்ந்து தீ பற்றி எரிவதால் அப் பகுதி முழுவதும் புகை மூட்டம் காணப்படுகிறது.

பொதுவாக பட்டாசு தயாரிக்கும் ஆலைகளிலும் ஏராளமான தொழிலாளர்கள் தீ விபத்தில் சிக்கி உயிரிழப்பதை பார்த்திருக்கிறோம். இதுபோன்ற ரசாயன இடங்களில் பணிபுரியும்போது தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக அனைவரும் வெளியில் வந்து விட்டால் உயிர் பிழைக்கலாம். அதை தவிர்த்து நாமே தீயை அணைக்கலாம் என முயற்சிக்கும் போது தங்களது உயிரை இழக்க நேரிடுகிறது.

எத்தனை கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து போனாலும் அதை உரிமையாளர் சம்பாதித்துக் கொள்வார். ஆனால் மனித உயிர் போய்விட்டால் அதை யாராலும் மீட்க முடியாது.