செயினை இழுத்த கல்லூரி மாணவர்களை மடக்கிப்பிடித்து வெளுத்த பெண்கள் - வைரல் வீடியோ

திருவள்ளூர்: செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 இளைஞர்களை முட்டிப் போடச் சொல்லி பெண்கள் அடி வெளுக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.


மீஞ்சூர் ரமணா நகரில் வசித்து வருபவர் தெய்வானை. இவர் சாலையில் நடந்து சென்றபோது, 2 இளைஞர்கள் ஹெல்மெட் அணிந்தபடி பைக்கில் வந்துள்ளனர். அவர்கள், திடீரென தெய்வானை கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். ஆனால், அது 5 சவரன் நகை என்பதால், நினைத்த நேரத்திற்குள் அந்த இளைஞர்களால் பறிக்க முடியவில்லை.

இதையடுத்து, தெய்வானை திருடன் திருடன் என சத்தம்போட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அந்த இளைஞர்கள் பைக்கில் தப்பிக்க முயன்றனர். ஆனால், அவர்களை சுற்றி வளைத்த பொதுமக்கள் சராமரியாக அடி வெளுத்தனர். 

பிறகு, அவர்களை முட்டிப் போட சொல்லி, கைகளை பின்னால் கட்டிப் போட்டு, தெய்வானை செம அடி அடிக்கும் காட்சியை வீடியோ எடுத்து, சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். இதற்கிடையே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து சம்பந்தப்பட்ட 2 இளைஞர்களையும் கைது செய்தனர்.

தண்டையார்பேட்டையை சேர்ந்த அவர்கள் 2 பேரும் காலேஜ் படிப்பதாகவும், செலவுக்கு காசில்லாததால் செயின் பறிக்க முயன்றதாகவும் கூறியுள்ளனர். இதன்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.